நாட்டில் மருத்துவமனை பிரசவங்கள் எண்ணிக்கை 90.6 சதவீதமாக உயர்வு: தேசிய சுகாதார ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நாட்டில் மருத்துவமனை பிரசவங்கள் எண்ணிக்கையானது 2023-2024ம் ஆண்டு காலகட்டத்தில் 90.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 2023-2024ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வானது நடத்தபட்டது. மும்பை சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் இந்த ஆய்விற்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டது.

இந்த ஆய்வின் தரவுகளின்படி நாட்டில் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது. 95.6 சதவீத கர்ப்பிணிகள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பை பெற்ற தாய்மார்களின் விகிதம் 70 சதவீதத்தில் இருந்து 76.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்தது நான்கு முறை மகப்பேறுவுக்கு முந்தைய பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகள் எண்ணிக்கை விகிதமும் 58.5 சதவீதத்தில் இருந்து 65.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது தாய்மார்களுக்கான சுகாதார சேவைகள் தொடர்ந்து சீராக வழங்கப்படுவதை பிரதிபலிக்கிறது. மேலும் முறையான உரிமம் பெற்ற ஒரு சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கையானது 2019-2021ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்து 88.6சதவீதத்தில் இருந்து 2023-2024ம் ஆண்டு காலகட்டத்தில் 90.6சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அனைவருக்கும் பிரசவ சேவை என்ற இலக்கை நோக்கி இந்தியாவை மேலும் நெருக்கமாக்கியுள்ளது.

Related Stories: