கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மறுஆய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள கணக்கு முடக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யும்படி மறுஆய்வுக் குழுவை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு கடந்த 21ம் தேதி இந்தியாவில் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த அமைப்பானது கரப்பான்பூச்சி திரும்பிவிட்டது என்ற புதிய கணக்குடன் மீண்டும் களமிறங்கியது. இந்த எக்ஸ் தள கணக்கு தற்போது 2,27000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கபட்டதை எதிர்த்து அதன் நிறுவனர் அபிஜித் திப்கே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் வீடியோ கன்பரன்ஸ் மூலம் மறுஆய்வுக்குழு முன் ஆஜராக அனுமதி அளித்தார்.

மேலும் சிஜேபியின் எக்ஸ் தள கணக்கை தடை செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதில் குழு திருப்தி அடைந்தால் எக்ஸ் தள கணக்கை தடை நீக்கம் செய்ய உத்தரவிடும் சட்ட அதிகாரம் குழுவிற்கு உண்டு என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து ஒன்றிய அரசுக்கும் , எக்ஸ் தளத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணைக்கு முன்னதாக மறுஆய்வுக்குழுவானது அனைத்து அம்சங்களையும் முழுமையாக பரிசீலிக்க வேண்டும் என்றும், அது குறித்த முடிவை நீதிமன்ற ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: