பெங்களூரு: டி.கே. சிவகுமார் திங்கட்கிழமை முதல்வர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூடி அவரை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்கின்றனர். மேலும் புதிய அமைச்சரவையில் இடம் பெற எம்எல்ஏக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து விதான சவுதாவில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் முதல்வர் பதவியை சித்தராமையா வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டு அமைச்சரவையை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து சித்தராமையா டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
அதேபோல் டி.கே.சிவகுமாரும் டெல்லி சென்று மேலிட தலைவர்களை ஆலோசனை நடத்தினார். புதிய அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும். துணை முதல்வர் பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் இன்று பெங்களூரு விதானசவுதாவில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேலிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதைதொடர்ந்து சட்டமன்ற தலைவராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்படுகிறார்.
டெல்லியில் நிருபர்களிடம் டி.கே.சிவகுமார் கூறியதாவது, ‘பெங்களூரு விதான சவுதாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என தேர்வு செய்யப்படுவர். அதன் பிறகு பதவி ஏற்பு விழா மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு உள்ளிட்டவை நடைபெறும்’ என்றார்.
திங்கட்கிழமை கர்நாடகாவின் முதல்வராக டி.கே. சிவகுமார் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மூத்த எம்எல்ஏக்கள் இன்னும் 2 வருடம் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்த நபர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி தேவை என மேலிட தலைமைக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். எனவே, மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்ற நிலை காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
