நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி: 2026 இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமையை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை மற்றும் ஆய்வு குழுவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன்,” நீட் மறு தேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.

மேலும் உயர் அதிகார வழிகாட்டுதல் குழு மேற்கொண்டு எந்தவித பிரச்னைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது. அதில் தேர்வு செயல்முறையை வலுப்படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய அனைத்து அடங்கும். குறிப்பாக வினாத்தாள் கொண்டு செல்லும் முறையில் இருந்த ஓட்டைகளை அடைத்துள்ளோம். குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் சுமார் அறுபது பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான பிரமாணப் பத்திரமும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,” நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தை பிரதமர் நேரடியாக கண்காணித்து வருகிறார். எனவே நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.இனி எந்தவித பிரச்னைகளும் எழாது என்று விளக்கமளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” இதுபோன்ற தேர்வு விவகாரத்தில் மாணவர்களை நாம் ஏமாற்றக் கூடாது. அது அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன வேதனையை தரும். குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் முன்னதாக நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் எவ்வாறு மோசடி நடைபெற்றது. பரிந்துரைகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா,” தற்போது அளிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள்,”வரும் ஆண்டுகளில் மோசடி நடைபெறாமல் நீட் தேர்வை அரசு எப்படி நடத்தப்போகிறது என்பது குறித்து விரிவான பிரமாணப்பத்திரத்தை ஜூலை 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: