திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்தது. கடந்த 18ம் தேதி வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும், இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.சி. மொய்தீனும், பாஜ கூட்டணி சார்பில் கோபகுமாரும் போட்டியிட்டனர். இதில் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் 101 வாக்குகள் பெற்று சபாநாயகர் ஆனார்.
இந்தநிலையில் இன்று கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரின் உரையுடன் 16வது கேரள சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. கவர்னரின் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் வரை மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பிரசவத்திற்காக 6 மாதம் கட்டாய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரியம் நவீனப்படுத்தப்படும். 4 வழிச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நவீன வசதிகளுடன் சுகாதாரத்துறை மேம்படுத்தப்படும். செலவு குறைந்த மருத்துவ சிகிச்சை வசதி அதிகரிக்கப்படும். போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
