புதிய சர்ச்சையால் பரபரப்பு; கேரள சட்டசபையில் வந்தே மாதரம் பாடல் பாதியில் நிறுத்தம்: ஆளுநர் மாளிகை உத்தரவை மீறிய காங்கிரஸ் அரசு

 

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தேசியப்பாடலான வந்தே மாதரம் முழுமையாக இசைக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் தொடக்கத்தில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உரையை நிகழ்த்துவதற்கு முன்பாக, தேசியப்பாடலான வந்தே மாதரத்தை முழுமையாக இசைக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகை தரப்பில் முன்னதாக நடந்த ஒத்திகையின்போது அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இருப்பினும், கேரள மாநில அரசு பாரம்பரிய நடைமுறையைப் பின்பற்றி, தேசியப்பாடலின் தொடக்கப் பகுதியை மட்டும் இசைக்க முடிவு செய்தது. அதன்படி, கேரள போலீசார் இசைக்குழுவினர் வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பை வாசித்துவிட்டு பாதியிலேயே நிறுத்தினர். கேரள சட்டசபை வரலாற்றிலேயே கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இப்பாடல் இசைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பேசியதாகக் குறிப்பிட்ட கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ‘ஆளுநர் முன்னிலையில் வந்தேமாதம் பாடல் இசைக்கப்படும்போது அதனை முழுமையாகப் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது.

இந்த பிரச்னை வருங்காலத்தில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார். முதல்வர் வி.டி.சதீசன் தலைமையிலான புதிய அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையே உள்ள மோதல் போக்கின் தொடக்கமாக இந்த சர்ச்சை பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை பாஜக ‘தேசியப்பாடலை அவமதிக்கும் செயல்’ என்று விமர்சித்துள்ளது. எனினும், தனது உரையில் புதிய அரசின் இந்திரா உத்தரவாத நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி இலக்குகள் குறித்தே விரிவாகப் பேசிய கவர்னர், ஒன்றிய அரசு குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: