மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திவரும் டாக்டர்களுக்கு மிரட்டல் விடுக்கவில்லை: முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை மிரட்டுவதாக வந்த குற்றச்சாட்டை முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க கோரியும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 21 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்ரா பரிஷத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புவது குறித்து அவசரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி மறைமுகமாக மருத்துவர்களை அச்சுறுத்துவதாக ஒரு சாரார் குற்றம்சாட்டினார்கள். முதல்வருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ‘‘போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை அச்சுறுத்தியதாக எழும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானவை. இது தீங்கிழைக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதி. மருத்துவ மாணவர்களுக்கோ அவர்களது இயக்கத்திற்கோ எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மருத்துவர்களின் இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். அவர்களது இயக்கம் உண்மையானது. நான் அவர்களை ஒருபோதும் மிரட்டவில்லை.

ஆனால் சிலர் நான் மிரட்டியதாக குற்றம்சாட்டுகிறார். இந்த குற்றச்சாட்டு தவறானது. நான் பாஜவுக்கு எதிராக பேசினேன். ஏனென்றால் இந்திய அரசின் ஆதரவுடன் அவர்கள் நமது மாநிலத்தின் ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறார்கள். மேலும் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.ஒன்றிய அரசின் ஆதரவுடன் அவர்கள் சட்டவிரோதத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நான் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

* 13வது நாளாக விசாரணை
கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 13வது நாளாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார். சந்தீப்பிடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் 130 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

* பெண் டாக்டரின் பெற்றோரிடம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சை
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோருக்கு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆக.9ம் தேதி காலை 1053 மணி முதல் 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 3 தொலைபேசி அழைப்புகள் வந்தன. மருத்துவமனை உதவி கண்காணிப்பாளர் என்று கூறிய நபர் பேசியது ெதாடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* முதல் அழைப்பு
மருத்துவமனை உதவி கண்காணிப்பாளர்: ஆர்ஜி கார் ஆஸ்பத்திரில இருந்து போன் பண்றேன். நீங்க உடனே வர முடியுமா?
பெண் டாக்டரின் தந்தை: ஏன்? என்ன நடந்தது?
மருத்துவமனை உதவி கண்காணிப்பாளர்: உங்கள் மகளுக்கு கொஞ்சம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கிறோம். சீக்கிரம் வர முடியுமா?
தந்தை: என்ன நடந்தது?
மருத்துவமனை: அந்த விவரங்களை டாக்டர்கள் மட்டுமே வழங்க முடியும். உங்களிடம் தகவல் சொல்வது மட்டுமே எங்கள் வேலை. தயவுசெய்து விரைவாக வாருங்கள். உங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற விவரங்களை நீங்கள் வந்த பிறகு டாக்டர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.
பெண் மருத்துவரின் தாய்:அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டதா?
மருத்துவமனை: நீங்கள் சீக்கிரம் வந்தால் நல்லது.
தந்தை: அவள் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறதா?
மருத்துவமனை: ஆமாம், ரொம்ப சீரியஸ். சீக்கிரம் வாருங்கள்.
இந்த அழைப்பு ஒரு நிமிடம் 11 வினாடிகள் நீடித்தது.
அடுத்த 5 நிமிடத்தில் இரண்டாவது அழைப்பு வந்தது. அந்த அழைப்பு சுமார் 46 வினாடிகள் நீடித்தது.

* இரண்டாவது அழைப்பு
மருத்துவமனை: உங்கள் மகளுடைய உடல்நிலை மோசமாக உள்ளது. தயவுசெய்து உங்களால் முடிந்தவரை சீக்கிரம் வாருங்கள்.
தந்தை: என் மகளுக்கு அப்படி என்னதான் நடந்தது?
மருத்துவமனை: அதை டாக்டர்களால் மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் தயவு செய்து விரைந்து வாருங்கள்.
தந்தை: போனில் பேசும் நீங்கள் யார்?
மருத்துவமனை: நான் உதவி கண்காணிப்பாளர். நான் ஒரு மருத்துவர் அல்ல. நாங்கள் உங்கள் மகளை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வந்துள்ளோம். நீங்கள் இங்கு வந்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தாய்: என் மகளுக்கு என்ன நடந்திருக்கும்? அவள் டூட்டியில் தானே இருந்தாள்?
மருத்துவமனை: நீங்கள் மிகவும் விரைந்து வாருங்கள்.
மூன்றாவது அழைப்பு 28 வினாடிகள் மட்டுமே நீடித்தது.

* மூன்றாவது அழைப்பு
மருத்துவமனை: தயவு சொல்வதை கொஞ்சம் தயவு செய்து கேளுங்க… நாங்க முன்னாடியே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்கோம். உங்க மகள்… இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்து இருக்கலாம். போலீஸ் இங்க இருக்கு. ஆஸ்பத்திரியில இருந்து எல்லாரும் இங்க இருக்கோம்.

உங்களைக் கூப்பிடறோம். நீங்கள் விரைவாக இங்கே வர வேண்டும். இவ்வாறு அந்த ஆடியோவில் உள்ளது. மருத்துவமனையில் இருந்து பேசிய 3 அழைப்புகளிலும் ஒரே நபர் தான் பேசியுள்ளார். பெற்றோரிடம் தகவலை இப்படியா சொல்வது என்ற கேள்வியை தற்போது எழுப்பியுள்ளனர்.

The post மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திவரும் டாக்டர்களுக்கு மிரட்டல் விடுக்கவில்லை: முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: