பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நேற்று அதிகாலை தனியார் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 5 பயணிகள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ள முதல்வர் சித்தராமையா உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளிலில் இருந்து சி-பார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு படுக்கை வசதி கொண்ட பஸ் நேற்றிரவு வடகனரா மாவட்டம், கோகர்ணாவுக்கு புறப்பட்டது. பஸ்சில் 15 ஆண்கள், 14 பெண்கள் என 29 பயணிகள் பயணம் செய்தனர்.
இதில் 25 பேர் கோகர்ணாவுக்கும் 2 பேர் ஷிவமொக்கா, 2 பேர் குமட்டாவுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த பஸ் நேற்று அதிகாலை 2.05 மணியளவில் சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகா, கொர்லத்து கிராஸ் அருகில் சென்றபோது, கோகர்ணாவில் இருந்து பெங்களூருக்கு சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் பயணம் செய்த 5 பயணிகள் உடல் கருகி அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்தனர். மேலும் லாரி டிரைவரும் உயிரிழந்தார்.
தகவலறிந்து சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தகவல் கிடைத்ததும் கிழக்கு மண்டல காவல்துறை டிஜிபி ரவிகாந்த்கவுடா உள்பட உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் மண்டியா மாவட்டம், மாவள்ளியில் இருந்து கோகர்ணா சென்ற 7 நண்பர்களில் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவல் அடிப்படையில் விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கீழே குதித்து உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து பற்றி அறிந்ததும் முதல்வர் சித்தராமையா, மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி ஆகியோர் சித்ரதுர்கா கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோரை தொடர்பு கொண்டு விவரம் பெற்றனர். விபத்து குறித்து அறிந்த முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டதுடன் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
* பிரதமர் இரங்கல்
விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்’ என்றார்.
* பெரிய விபத்து தவிர்ப்பு
விபத்துக்குள்ளாகிய தனியார் பஸ்சின் பின்னால், அதே கோகர்ணாவுக்கு 46 மாணவ- மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் பள்ளி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தனியார் பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த, பள்ளி பஸ் ஓட்டுநர் சச்சின், உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதன் மூலம் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த தனியார் பஸ்சில் சிக்கி தவித்த 7 பயணிகளை ஓட்டுநர் சச்சின், தனது உயிரை பொருட்படுத்தாமல் போராடி உயிருடன் மீட்டுள்ளார். இது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
