மும்பை: மோசமான வானிலை மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக இன்டிகோவின் 67 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமானிகளுக்கு அதிக ஓய்வு அளிக்கும் புதிய விதிகள் காரணமாக விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், இம்மாத தொடக்கத்தில் இன்டிகோ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான பயணிகள் பெரிதும் அவதியுற்றனர். இதையடுத்து ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்த பல்வேறு நடவடிககைகளுக்கு பிறகு தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் இன்டிகோ நிறுவனத்தின் 67 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து இன்டிகோவின் இணையதளத்தில், “முன்கணிக்கப்பட்ட மோசமான வானிலை மற்றும் செயல்பாட்டு காரணங்களுக்காக 67 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு மட்டுமே செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவை அகர்தலா, சண்டிகர், டேராடூன், வாரணாசி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் முன்கணிக்கப்பட்ட மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிஜிசிஏ, டிசம்பர் 10 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 வரையிலான குளிர்காலத்தை அதிகாரப்பூர்வ மூடுபனி காலமாக அறிவித்துள்ளது.
குளிர்கால அட்டவணையின்கீழ், விமான நிறுவனம் வாரத்துக்கு 15,014 உள்நாட்டு விமானங்களை அல்லது ஒருநாளைக்கு சுமார் 2,144 விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. இது 2025 கோடைக்கால அட்டவணையில் இயக்கப்பட்ட 14,158 வாராந்திர விமானங்களை விட சுமார் 6 சதவீதம் அதிகம். இன்டிகோ தற்போதைய குளிர்கால அட்டவணையின்கீழ் உள்நாட்டு வழித்தடங்களில் ஒருநாளைக்கு 1,930 விமானங்களுக்கு மேல் இயக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
