திருவனந்தபுரம்: சான்றிதழுக்கு பதிலாக நிரந்தரமான, புகைப்படத்துடன் கூடிய பிறப்பிட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த கேரள அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். நாட்டில் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை ஒன்றிய அரசு கடுமையாக்கி வரும் நிலையில், பிறப்பு மற்றும் நீண்டகால வசிக்கும் இடத்தை உறுதி செய்யும் நிரந்தர பிறப்பிட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியிருப்பதாவது: மக்கள் தங்கள் இருப்பை நிரூபிக்க போராட வேண்டிய நிலைமை கவலைக்குரிய விஷயம். ஒவ்வொரு தனிநபரும் தாங்கள் இந்த மாநிலத்தில் பிறந்தவர்கள், வசிப்பவர்கள் என்பதையோ, ஓரிடத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்பதையோ எந்தவொரு அதிகாரியிடமும் எளிதாக நிரூபிக்க வழி இருக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரிடமும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கொண்ட நம்பகமான ஆவணம் இருக்க வேண்டும்.
கேரளாவில் அத்தகைய ஆவணத்தை அறிமுகப்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது. தற்போது வழங்கப்படும் பிறப்பிடச் சான்றிதழுக்கு பதிலாக நிரந்தரமான புகைப்படம் கொண்ட பிறப்பிட அடையாள அட்டை வழங்குவதற்கு அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அட்டை சட்டப்பூர்வ செல்லுயடியாகும் தன்மை கொண்ட நம்பகமான ஆவணமாக இருக்கும். இதை வைத்து மாநில அரசு தொடர்பான சேவவைகளையும், மற்ற சமூக தேவைகளையும் பெற முடியும். தற்போது மக்கள் வெவ்வேறு தேவைகளுக்காக பல முறை பிறப்பிடச் சான்றிதழ் பெற வேண்டி உள்ளது. இந்த குறை பிறப்பிட அடையாள அட்டை மூலம் நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு கூறினார்.
* பாஜ கடும் எதிர்ப்பு
கேரள அரசின் முடிவுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ மூத்த தலைவர் முரளிதரன் கூறுகையில், ‘‘குடியுரிமையை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. ஆதார் அட்டையில் ஏற்கனவே விரிவான தனிப்பட்ட விவரங்கள் இருக்கும் போது மாநில அரசு ஏன் மற்றொரு அடையாள ஆவணத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த முடிவு சட்டவிரோதமானது. இந்த நடவடிக்கை கடுமையான சட்ட மற்றும் அரசியலமைப்பு கேள்விகளை எழுப்புகிறது’’ என கூறி உள்ளார்.
