புதுடெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜ முன்னாள் எம்எல்ஏவின் சிறைதண்டனை தற்காலிகமாக ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உபி மாநில முன்னாள் பாஜ எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் பின் சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார்.சிறுமியின் 2 உறவினர்கள் சாலை விபத்தில் இறந்தனர். சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜவிலிருந்து நீக்கப்பட்ட, குல்தீப் சென்காருக்கு 2019 டிசம்பரில் ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமியின் தந்தை மரணம் தொடர்பான வழக்கில் குல்தீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனது தண்டனையை எதிர்த்து குல்தீப் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப்பின் சிறை தண்டைனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வழக்கறிஞர்களான அஞ்சலி படேல்,பூஜா ஷில்ப்கர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளமல் தண்டனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்காரின் குற்றவியல் பின்னணி மற்றும் கொடூரமான குற்றங்களில் அவர் தண்டிக்கப்பட்ட போதிலும், தண்டனையை நிறுத்தி வைப்பதன் மூலம் உயர் நீதிமன்றம் சட்டத்திலும் ஆதாரங்களிலும் பெரும் தவறு செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
