லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய் வெண்கலச் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘சட்டப்பிரிவு 370 என்ற சுவரை இடித்துத் தள்ள வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பாஜ பெருமை கொள்கிறது’ என கூறி உள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராஷ்டிர பிரேர்ணா ஸ்தலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த ஸ்தலத்தில் வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கலச் சிலைகளும், 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவ அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சட்டப்பிரிவு 370 என்னும் சுவரை இடித்துத் தள்ள எங்கள் அரசுக்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பாஜ பெருமை கொள்கிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி மரபு, இப்போது ஒன்றிய, மாநில அரசுகளை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்கிறது. 2014க்கு முன்பு சுமார் 25 கோடி மக்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயனடைந்தனர். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 95 கோடியாக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம், உலகளவில் பாதுகாப்பு உற்பத்திக்கு அறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த ராஷ்டிர பிரேர்ணா ஸ்தலம், சுயமரியாதை, ஒற்றுமை மற்றும் சேவைப் பாதையில் இந்தியாவை வழிநடத்திய லட்சியங்களின் சின்னமாகும். சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு சாதனைக்கும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமே காரணம் என்ற போக்கு எப்படி வளர்ந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அனைத்து கட்சி தலைவர்களும் கவுரவிக்கப்பட்டுள்ளனர். நரசிம்ம ராவ் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார். இந்த பண்டிகை அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்.
