புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வௌியிட்டார். சந்தாலி மொழி என்பது, 92வது திருத்த சட்டம், 2003 மூலம் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான பழங்குடியின மொழிகளில் ஒன்றான சந்தாலி மொழி, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கணிசமான பழங்குடி மக்களால் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முர்மு நேற்று வௌியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் முர்மு, “இந்திய அரசியலமைப்பு சட்டம் தற்போது ஒல் சிக்கி எழுத்துருவில் எழுதப்பட்டு, சந்தாலி மொழியில் கிடைப்பது அந்த மொழியை பேசும் அனைத்து மக்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். இது அந்த மொழி பேசுவோர் தங்கள் சொந்த மொழியில் இந்திய அரசியலமைப்பை படித்து, புரிந்து கொள்ள உதவும்” என்று கூறினார்.
