திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று மாலை தங்க அங்கி அணிந்த ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நடை திறந்த அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முந்தைய வருடங்களை விட இந்த வருடம் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.
சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. இதனால் உடனடி முன்பதிவில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இந்த மண்டல காலத்தில் நேற்று வரை தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை (27ம் தேதி) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 23ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த தங்க அங்கி இன்று மாலை சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
நாளை காலை 10.10க்கும் 11.30க்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. வழக்கமான பூஜைகளுக்குப் பின் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு இவ்வருட 41 நாள் மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். இன்று 30 ஆயிரம் பேருக்கும், நாளை 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
