மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: 1098-க்கு தகவல் தரலாம்

*கலெக்டர் அருணா தலைமையில் நடந்த விழாவில் அறிவுறுத்தல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நடைபெற்றால், நடைபெறுவது போல தொிந்தால் 1098க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த கலெக்டர் தலைமையில் நடந்த தேசிய குழந்தைகள் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி சேரிங்கிராஸ், கார்டன் சாலை வழியாக எச்ஏடிபி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், இளைஞர் நிதி குழும உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் குழந்தை கல்வி சலுகை அல்ல, குழந்தைகளின் உரிமை – குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், குழந்தைகள் பாதுகாப்பே சமூக பாதுகாப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை பள்ளியில் கல்வி கற்பதனை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தை தொழிலாளராகவோ, குழந்தை திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலை, பாலின பாகுபாடு, சாதி வேற்றுமை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவைகள் நடைபெற அனுமதிக்க கூடாது.

எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான வன்முறை நடைபெற்றால், நடைபெறுவது போல் தொிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இப்பேரணியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: 1098-க்கு தகவல் தரலாம் appeared first on Dinakaran.

Related Stories: