திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான். மக்கள் வழிபடும் தெய்வங்கள், பல்வேறு விதமான முறைகளில் கையாண்டு இருந்தாலும், அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது விளக்கேற்றி வழிபடுவதே ஆகும். தீபஜோதியில் முழுமையாக மனநிறைவும், ஆத்ம திருப்தியும் கிடைக்கப் பெறுகிறோம். ஆகையால், நாம் தொடங்கும் பூஜையிலும், விசேஷங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன், பிறந்து, அவன் மரணம் தழுவும் வரை விளக்கு முக்கிய ஸ்தானத்தைப் பெறுகிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. விளக்கோடு, பெண்களை ஒப்பிடுவர்.

மகாலட்சுமி வாசம் செய்யும் பிரதான இடம் விளக்கிலுள்ள ஜோதியே யாகும்.பிரம்ம முகூர்த்தத்தில், திருவிளக்கு ஏற்றி, பக்தியுடன் ஸ்லோகங்களை உச்சாடனம் செய்து, நமஸ்காரம் செய்வோம் என்றால், திருமகள் செல்வத்தை வாரி, குறைவின்றி வழங்குவாள்.இருளினை நீக்கி, பிரகாசமான ஒளியைத் தருவாள். முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோர் தவத்தில் ஆழ்ந்து, ஒளிவட்டமான ஞானவிளக்கை பெற்றனர்.

பிரம்ம முகூர்த்தத்தில், வாசலில் விளக்கேற்றிய பின்னர், பூஜை அறையில் ஏற்றுவது சாலச்சிறந்தது. ஆண்டாள், தன் பாசுரத்தில், `கோதுகலம்’ எனக் குறிப்பிடுகிறாள். கண்ணனை அடைய, பிரம்ம முகூர்த்தத்தில் தம் தோழிகளுடன் நோன்பு நோற்கிறாள். அகலில் தீபம் ஏற்றுவது மிகவும் உசிதமாகும். பஞ்ச பூதங்கள் இயக்கத்தில் (சூரிய ஒளி, நீர் மணல், தீ, காற்று) செய்யப்பட்டதுதான் அகல்விளக்கு. வீட்டில் உள்ள பெண்கள் எப்படி விளக்கேற்ற வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது.

அதன் படி செய்தால் பல நன்மைகளை கைக்கூடப் பலனாக பார்க்கலாம். விடியற் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து முடித்ததும், முடியை விரித்து போடாமல், நுனி முடிச்சு போட்டு, நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு, மனையிலோ அல்லது வெள்ளை துணியிலோ அமர்ந்து, தனக்கு வேண்டிய வரங்களைக் கேட்டு பெற வேண்டும். அதற்கு, விளக்கின் முன் அமர்ந்து நமக்கு வேண்டியதைக் கூறி சங்கல்பம் (சங்கல்பம் ஒரு வகை மந்திரம்) செய்து கொள்வது நலம்.

விளக்கை, மகாலட்சுமியாக நினைத்து, “தாயே.. நீயே… அருள் புரிய வேண்டும் என் குலவம்சத்தில் பிள்ளைகள் வாழையடி வாழையாக தழைத்து இருக்க வேண்டுமென’’ பிரார்த்தனை செய்தல் அவசியம். விளக்கை ஏற்றும் பொழுது, பசும்நெய் அல்லது நல்லெண்ணெய்யை குளம் போல, அகலில் எண்னெயைவிட்டு, அதன்பின்புதான் திரியை போடுதல் அவசியம். (வெறும் அகலில் திரியை போடக்கூடாது) பஞ்சு திரியை போட்டு, தீபத்தை (வாழைத்தண்டு தாமரை தண்டு இவற்றின் திரி) ஏற்றி வணங்கி வரும் பொழுது, சிறப்பான பலன்கள் உண்டாகும்.

ஒரு அருமையான கதை ஒன்று இருக்கிறது.. மிதிலாபுரி பட்டணத்தை ரங்கராஜன் என்கின்ற அரசன் ஆண்டு வந்தார். அவர், விடியற்காலையில் யார் முகத்தில் முழிக்கிறாரோ.. அவரை கொண்டு வந்து, தன்னுடைய அரண்மனைத் தூணில் கட்டிப் போட்டுவிடுவார். அதன் பின்பு இரவு, நகர் சோதனைச் செய்ய கிளம்புவார். அந்த நாள் அரசருக்கு நல்லபடியான நாளாக அமைந்தால், கட்டி போட்ட நபருக்கு பரிசு கொடுத்து அனுப்பிவிடுவார். அதற்கு மாறாக, அன்றைய நாளில் அவர் மனம் வருத்தப்பட்டாலோ அல்லது எதிர்பாராத ஏதோ ஒரு இன்னலுக்கு நேரிட்டாலோ, கட்டிப் போட்டிருந்த நபருக்கு தண்டனைக் கொடுத்து, அதன் பின்பு வீட்டிற்கு அனுப்புவார். இப்படி இருக்க ஒருநாள், ஜெகன்நாதன் என்னும் சலவை தொழில் செய்பவரின் முகத்தை, அரசர் பார்த்துவிட்டார்.

அரசர், ஜெகன்நாதனை, அரண்மனை தூணில் கட்டிவைத்தார். அன்று இரவு அரசர், காட்டிற்குச் செல்லும் பொழுது, ஒரு புதையல் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த அரசர், அரண்மனைக்கு திரும்பினார். நேராக ஜெகன்நாதனை விடுதலை செய்து, அவரிடத்தில். `உனக்கு என்ன வேண்டும் கேள்’ என்றார். `மன்னா! எனக்கு தற்போது எதுவும் வேண்டாம். என்னுடைய மகளிடம் கேட்டு ஆலோசித்த பின்பு நான் கூறுகிறேன்’ என்றுகூறி விட்டு வீடு திரும்பினார்.

தண்டனை எதுவும் இன்றி, திரும்பிய தன் தந்தையைக் கண்டு வீட்டில் உள்ளோர் மகிழ்ந்தனர். தன்னுடைய மகளிடம், மன்னர் கூறிய செய்தியை பற்றி விளக்கினார். அதை கேட்ட மகள், `அப்பா நீ மன்னரிடத்தில் இருந்து ஒரு யாசகம் பெற வேண்டாம். அவரிடத்தில் ஒன்று மட்டும் கேளுங்கள். நாளை வெள்ளிக் கிழமை. அதுவும் பௌர்ணமி நாள். தேவர்கள், திரியும் நேரமான மாலை பொழுதில், மிதிலாபுரி நகரம் முழுவதும் இருட்டில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஒரு 20 நிமிடங்கள் இருந்தால்போதும். என்று கேட்டு வாருங்கள்’ என்று கூறினாள்.

சலவை தொழிலாளி, மன்னரிடத்தில், மகள் கூறியதைக் கேட்டான். மன்னரோ.. `ஆஹா… அடேய்! இது என்னடா கேள்வி. நான் உனக்கு பொன்னும் பொருளும் கொடுக்கிறேன் என்றால், அதுலாம் வேண்டாம் என்றுகூறிவிட்டு, இருபது நிமிடம் நகரத்தியை இருளில் ஆழ்த்த வேண்டும் என்று கேட்கிறாய்? இது என்ன விந்தை?’ என்று அவர் விசித்திரமாக சிரித்தார். சிறிது நேரம் கழித்து, `சரி. நீ… கேட்ட படியே உனக்கு வாக்கு தருகிறேன்’ என்று அரசர்கூறி அதற்கான உத்தரவினையும் பிறப்பித்தார். அன்று இரவு, 20 நிமிடம் யாருடைய வீட்டிலும் விளக்கு ஏற்றக் கூடாது என்று முரசு கொட்டி அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில், சலவை தொழிலாளியின் மகள், தனது வீட்டில் விளக்கு ஏற்றி, சர்க்கரை பொங்கல் செய்து, விரலி மஞ்சள் வைத்து, வெற்றிலை பாக்குடன், ரவிக்கை துண்டை வைத்து, திருவிளக்குப் போற்றி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில், மகாலட்சுமி ஆனவள், எந்த வீட்டிற்கு சென்றாலும் இருள் மயமாக இருப்பதைக் கண்டு, புகலிடம் இல்லாமல் தவித்தாள். அவள், வெளிச்சத்தைத் தேடினாள்.
அப்பொழுது சலவை தொழிலாளி வீட்டில் மட்டுமே விளக்கு இருப்பதைக் கண்டதும் அவள் மகிழ்ந்தாள். அந்த வீட்டிற்குள் மகாலட்சுமி காலடி எடுத்து வைத்து, உள்ளே நுழைந்தாள்.
வீடே ஒரு விதமான, பிரகாசமாக ஒளி எழும்பியதைக் கண்ட சலவை தொழிலாளியின் மகள், மகாலட்சுமி வந்ததை உணர்ந்தாள்.

சட்டென கதவை அடைத்தாள். திருமகள், பிரகாசமாக ஜோதியாய் விளங்கிய அகலின் முன் அமர்ந்தாள். அவள் மனம் மகிழ்ந்தாள். சலவைத் தொழிலாளியின் மகள், திருமகளின் திருவடியை வணங்கி, `தன் வீட்டைவிட்டு நீ எங்கும் நகரக் கூடாது’ என்று அவளிடம் வரமாகக் கேட்டுக் கொண்டாள். அடுத்த நாள் முதல், வீட்டில் வைரங்களும் தங்கக் கட்டிகளும் கொட்ட ஆரம்பித்தன. ஜெகன்நாதன், பெரும்
செல்வந்தனாக மாறினான்.

விளக்கை பற்றி இத்தகைய பெரும் பெருமைகளை வள்ளலார் அறிந்ததன் காரணமாகத்தான், `அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கடலே’ என்று தீபத்தை தீபஜோதியே என அதில் அவர் இறைவனைக் கண்டார். திருவண்ணாமலையில், அண்ணாமலையார் தீயின் வடிவமாக மக்களுக்கு அருள் அளித்து, கார்த்திகை தீபத்தன்று மலையில் மீது அகண்ட தீபத்தை ஏற்றி ஊருக்கே வெளிச்சத்தை காட்டுகின்றார். இத்தகைய பெரும் வரங்களை தரும் விளக்கினை ஏற்றி அருளை பெறுவோம். உன்னதமான சக்திகளை அடைவோம்.

எண்ணிய காரியங்கள் சித்தியாக, 11 வாரம் அல்லது 16 வாரம் என்ற எண்ணிக்கையில், விளக்கை ஏற்றி தெரிந்த சில ஸ்லோகத்தை சொல்லி (மகாலட்சுமியின் ஸ்லோகமாக இருந்தால் நல்லது) வணங்குவோம். வெற்றி பெறுவோம்!

பொன்முகரியன்

The post திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள் appeared first on Dinakaran.

Related Stories: