முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

தன் தந்தையினுடைய மரணத்திற்குப் பின், தன் தாயை அழைத்துச் சென்று ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தான் ஒரு மகன். அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமயத்தில் தன்னுடைய தாயை பார்க்க வந்து செல்வான். ஒருமுறை அந்த தாய் மரிக்கும் தறுவாயில் இருப்பதாக, ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து மகனுக்கு செய்தி அனுப்பப்பட்டது. மகனும் ஓடோடி வந்து ஏதேனும் கடைசி ஆசை இருக்கிறதா என தாயிடம் விசாரித்தான். தாய் தன் மகனிடம், தழுதழும்பிய குரலில் ‘‘இந்த காப்பகத்திற்கு ஒரு நல்ல மின்விசிறி வாங்கிக் கொடுப்பா…’’ என்று வேண்டிக் கொண்டாள். மகன் கண்ணீருடன், ‘‘உங்களை காணவரும் போதெல்லாம் நீங்கள் இந்த உதவியை கேட்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் மரித்துவிடுவீர்கள், இதைத்தவிர வேறு ஆசை இல்லையா? என கேட்டான். அப்போது தாய் மகனிடம், ‘‘மகனே என்னால் இங்குள்ள வெப்பத்தை சமாளிக்க முடிந்தது. உன்னை உனது மகன் இங்கு அனுப்பும் போது, உன்னால் இந்த வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது’’ என கண்கலங்க பரிவாக கூறி உயிரை விட்டாள். இறைமக்களே, இச்சம்பவத்தை உங்களால் கற்பனை செய்து காண முடிகிறதா? இதனை ஒரு குறுநாடகமாக பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

நாம் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுப்போம். தக்காளி விதையை விதைத்தவன் பப்பாளி பழத்தை அறுவடை செய்ய முடியாது. நமது இன்றைய எண்ணங்களும், செயல்பாடுகளும்தான் எதிர்கால வாழ்வை நிர்ணயம் செய்கிறது என்றால் மிகையாகாது. இதை புரிந்துதான் நம் முன்னோர்கள் ‘‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’’ என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். சமீப காலங்களில் சொத்துக்காக தன் தகப்பனை கொலை செய்த மகன், மாமியாரை வீட்டைவிட்டு விரட்டிய மருமகள், கள்ளக் காதலுக்காக, தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கொலை செய்த தாய் என குடும்ப உறவுகள் தொடர்பான அதிபயங்கரமான செய்திகளை விதவிதமாக கேள்விப்படுகிறோம். இவைகள் அனைத்தும் நமது மனுகுலத்திற்கே ஆபத்தானது என்பதை உணர வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். தாய் தந்தையர்களை அலட்சியம் செய்தல் பாவம் மட்டுமல்ல, நமது ஆயுள் காலத்தையும் குறைத்துவிடும். எனவேதான், ‘‘உன் தேவனாகிய கர்த்தர், உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக’’ (யாத் 20:12) என்று இறை வேதம் எச்சரிக்கிறது.
– அருள்முனைவர்.
பெவிஸ்டன்.

 

The post முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! appeared first on Dinakaran.

Related Stories: