திருக்களிற்றுப்படியார்

இறைவன் தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது, தானே பூமியில் பிறப்பதுண்டு. இல்லையென்றால் சில மகான்களை பூமிக்கு அனுப்பி, அவர்கள் மூலமாகத் தர்மங்களை நிலைநாட்டுவதும் உண்டு. அதன் படி பல காலங்களுக்கு முன் உய்யவந்த தேவநாயனார் என்னும் நாமம் தாங்கி, முக்கண் முதல்வன் பூமியில் பிறந்து, ஞானநிலையை அடைந்து சித்தனாகத் திரிந்து வந்தார். உய்ய வந்த தேவநாயனார் என்ற பெயரில் தோன்றிய இறைவன், திருமலை முதல் தென்குமரி வரை பரந்து விரிந்த தமிழகம் முழுதும், தான் கால் நோக நடந்து, பக்தியையும் ஞானத்தையும் உலகிற்கு உணர்த்தியும் போதித்துக் கொண்டும் வந்தார். அப்படி அவர் சஞ்சரிக்கும் காலத்தில், திருவியலூர் என்ற ஊரை அடைந்தார். அங்கே ஆளுடை தேவ நாயனாரைக் கண்டார்.

அவரது பக்குவ மனம், உய்ய வந்த தேவ நாயனாரை ஈர்த்தது. அவருக்கு சிவ தீட்சை தந்து ஞான உபதேசம் செய்தார், உய்ய வந்த தேவநாயனார். தான் உபதேசித்த ஞானத்தை சுருக்கி, நாற்பத்தி நாலு பாடல்கள் கொண்ட செய்யுளாகப்படைத்து அதையும் ஆளுடை தேவநாயனாரிடம் கொடுத்துவிட்டு சித்தி அடைந்தார் உய்ய வந்த தேவநாயனார். அந்த செய்யுளுக்கு திருவுந்தியார் என்று பெயர். ஈசன் அவதாரமான உய்ய வந்த தேவநாயனாரிடம் உபதேசம் பெற்றஆளுடைய தேவநாயனார், பெரும் ஞானியாக உயர்ந்தார்.

இவர் ஒருமுறை திருக்கடவூருக்குச் சென்றபோது, அங்கே ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவனைக் கண்டார், ஆளுடைய தேவநாயனார். அந்த இடை சிறுவனின், பற்றின்மையும், ஞானமும் அவரைக் கவர்ந்தது. தனது குரு தனக்குத்தந்த அதே சிவ தீட்சையை அவருக்கும் தந்து சிவ ஞான உபதேசம் செய்தார். தனது குருவின் திருநாமமான “உய்ய வந்த தேவநாயனார்’’ என்ற திருநாமத்தையே தனது சீடனுக்கும் சூட்டினார். தனது குரு செய்து தந்த ஞான நூலான திருவுந்தியார் என்ற நூலையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் தெளிவுற விளக்கிவிட்டு சித்தி அடைந்தார் ஆளுடைய தேவநாயனார். ஆளுடைய தேவநாயனார் அருளிய ஞான உபதேசம், உய்ய வந்த தேவநாயனார் மனதில் ஆழப் பதிந்தது.

அவர் செய்யும் சிவயோகத்தால், அவர் ஞான சூரியனாக பிரகாசிக்க ஆரம்பித்தார். தான் அடைந்த சிவானுபவத்தை, அதாவது இறைவனை உணர்ந்த ஞானநிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று எண்ணினார். தனது பரம குரு நாதர் செய்த திருவுந்தியார் என்ற நாற்பத்தி நாலு பாடல்கள் கொண்ட ஞானநூலைத் தழுவி, மேலும் பல நல்ல விளக்கங்களை சேர்த்து, ஒரு
அற்புதமான சிவஞான நூலைச் செய்தார்.தான் செய்த இந்த அற்புத நூலை, தில்லை நடராஜப் பெருமான் திருப்பாதத்தில் வைத்து சேவிக்க வேண்டும் என்று அவரது மனம் ஆசைபட்டது. ஆகவே, தான் எழுதிய இந்த நூலை, எடுத்துக்கொண்டு சிதம்பரம் சென்றார்.

சிற்றம்பல நாதனின் திருவடியில், தான் எழுதிய நூலை வைத்து வணங்க வேண்டும் என்ற தனது உள்ளத்து அவாவை, அங்கு இருந்த தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார். “ஒரு ஆடு மேய்ப்பவனான நீ எழுதிய நூலை சிற்றம்பல நாதனின் பாதத்தில் வைப்பதா? வேண்டுமென்றால் ஒன்று செய்கிறோம். நீங்கள் எழுதிய நூலை கூத்தபிரானின் சந்நதிப்படியில் கீழ்படியில் வேண்டுமானால் வைக்கலாம் உய்ய வந்த தேவநாயனார் மனம் புண்படும் படி பேசி பரிகாசம் செய்தார்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அவர்களின் சொல் என்னும் ஈட்டி, உய்ய வந்த தேவநாயனாரின் மனதை ஆழத்துளைத்தாலும், உள்ளம் தளராமல் உறுதியோடு நின்றார். மெல்ல புன்னகை பூத்தார்.

“திருக்கூத்தபிரானின் திருப்படியில், வைப்பதற்கு நான் பெரும் பாக்கியம் செய்து இருக்கவேண்டும்’’ என்று தலைமேல் கை குவித்து தனது பாக்கியம்தான் என்னே என்று வியந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவரது செயல் தில்லை வாழ் அந்தணர்களுக்கு ஆச்சரியம் தந்தது. இருப்பினும், அதைக் காட்டிக்கொள்ளாமல், அவரது திருக்கைகளில் இருந்து அவர் எழுதிய ஞான நூலை பெற்றுக் கொண்டு, சிற்றம்பல நாதன் சந்நதியை அடையும் படிகளில் கடைசிப் படியில் வைத்தார்கள். அடுத்த நொடி, ஒரு பெரும் இடி சத்தம் கேட்டது.

சிற்றம்பல நாதனின் சந்நதியை அடையும் படிகளின் இரண்டு பக்கமும் கல்லால் ஆன யானையின் சிலைகள் இருக்கும். அந்த சிலைகள் திடீரென்று உயிர் பெற்ற யானையை போல் பிளிறின. அதை கண்ட அனைவரும், கண்டதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல், வாயைப்பிளந்தபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயிர்பெற்ற கல்யானைகள் இரண்டும், இது எதையுமே கண்டுகொள்ளவில்லை. தங்களது வேலையிலேயே கண்ணாக, சிற்றம்பல நாதனின் சந்நதியை அடையும் படிகளில், கீழ்படியில் இருந்த ஓலைச் சுவடியை, இரண்டு யானையும் சேர்ந்து ஒரே சமயம் தூக்கியது.

மீண்டும் ஒரு முறை தெய்வீகமாக பிளிறின. பிறகு இரண்டும் ஒரே சமயத்தில் திரும்பி சந்நதிக்குள்ளே சென்று சிற்றம்பல நாதனின் திருப்பாத கமலத்தில் அவர் எழுதிய ஞானநூலை வைத்துவிட்டு, மீண்டும் கடமையே கண்ணாக தங்கள் இருப்பிடம் வந்து மீண்டும் கல்லாக மாறிவிட்டன.கண்ட காட்சியை நம்ப முடியாமல் அனைவரும் தள்ளாடும் அந்த சமயம், சிதம்பரநாதன் சந்நதியில் இருந்து முக்கண் முதல்வன் குரல் கேட்டது.

“மகனே உய்ய வந்த தேவா! உனது பக்தியை மெச்சினோம். நீ எழுதிய இந்த நூலை யாம் மனமார ஏற்றோம். அங்கீகரித்தோம். எம் சந்நதியின் வாசலில் இருக்கும் படிகளின் இரு மருங்கிலும் இருக்கும் கல்யானைகளால் உமது, நூலை எடுத்து வரச்செய்து, எமது பாதத்தில் சேர்த்துக்கொண்டமையால், நீ எழுதிய இந்த நூல் களிற்றால் (யானையால்) படி தாண்டிய நூல் என்று அழைக்கப்படும். அதாவது “திருக்களிற்றுப் படியார்’’ என்று அழைக்கப்படும். சிவ நேயச்செல்வர்கள் என்றும் தங்கள் சிரத்தின் மீது வைத்து சேவிக்கும் தெய்வீக நூலாக இது திகழும். வாழ்க நீ! வளர்க நும் தொண்டு! ஆசிகள்!’’ என்று சந்நதிக்குள் இருந்து ஒலித்த ஈசனின் அமுதக் குரல் சட்டென்று நின்றது.

வெறும் சில நொடிகளில் நடந்துவிட்ட பல அதிசயங்களால், தங்கள் தவறை உணர்ந்து கொண்ட தில்லை வாழ் அந்தணர்கள், உய்ய வந்த தேவநாயனார் பாதத்தில் விழுந்து தங்கள் பிழையைப்பொறுக்கும்படி வேண்டினார்கள். அதைக் கண்டு பதறிய உய்ய வந்த தேவநாயனார், அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஈசனின் திருவருளை எண்ணி கண்ணீர் வடித்து, ஆனந்தக் கூத்தன் பாதத்தில் தனது சிந்தனையைச் செலுத்தினார். அடுத்த சில நொடிகளில் அவர் ஜோதியாக மாறி ஈசனோடு இரண்டறக் கலந்தது. “ஹர ஹர மகாதேவா’’ என்ற சத்தம் எங்கும்
எதிரொலித்தது.

“உந்தி களிறு உயர் போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் வந்த
அருட்பண்பு வினா போற்றி கொடி பாசமிலா
நெஞ்சு விடுஉண்மை நெறி சங்கற்ப முற்று’’

– என்ற வெண்பா, தமிழ் சைவநெறியின் உயர்ந்த ஞான நூல்களைப்பட்டியலிடுகிறது. இதில் மொத்தம் பதினான்கு நூல்கள் இடம்பெற்று உள்ளன. இதில் உய்ய வந்த தேவநாயனாரின் பரம குரு இயற்றிய உந்தியாரும், அவர் இயற்றிய களிற்றுப்படியார் என்ற நூலும், சைவ சமயத்தின் பெரும் குருவான மெய் கண்டார் எழுதிய சிவ ஞான போதம் என்ற நூலுக்கும் முதன்மையாகக்கருதி, சிவஞான போதத்தை பின்னே சொல்லி, களிற்றுப்படியாரைப் பின்னே சொல்லி இருப்பதை கவனிக்கவேண்டும்.

இதில் இருந்து இந்த நூலின் பெருமையையும் உயர்வையும் நாம் உணரலாம். சிவஞான போதம் எழுதிய மெய்கண்டாரும்கூட உந்தியாரில் இருந்தும் களிற்றுப்படியாரில் இருந்தும் கருத்துக்களையும், சொற்களையும், சிந்தனைகளையும் தழுவி தனது சிவ ஞான போதம் என்ற உயர்ந்த சிவஞான நூலில் பல செய்யுள் செய்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.இப்படி ஒரு உயர்ந்த நூலை உய்ய வந்த தேவநாயனாரின் மூலமாக நமக்குத்தந்து, தன்னைக் கோயில் கல்யானைகளை கொண்டு ஆங்கீகரித்த தில்லை நடராஜனை வணங்கி, திருக்களிற்றுப்படியார் சொன்ன படி சேவித்து நற்கதி பெறுவோம்.

ஜி.மகேஷ்

The post திருக்களிற்றுப்படியார் appeared first on Dinakaran.

Related Stories: