காரணம் இல்லாமல் காரியம் இல்லை!

மனிதர்கள் செய்கின்ற பெரும்பாலான முடிவுகளுக்குக் காரணம் அவர்களுடைய அச்சம், எதிர்காலத்தைப் பற்றிய பயம். இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். மந்தரை கைகேயியின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கைகொள்ளக்கூடிய அத்தனை விஷயங்களையும், அவள் ஏற்காத வண்ணம் செய்துவிட்டு, எதிர்காலத்தைக் குறித்த பயத்தை, காலச்சூழலோடு புத்திசாலித்தனமாக எடுத்துரைத்து வளைத்து விடுகின்றாள். அவ்வளவு தான் நடக்கிறது இராமாயணத்தில். அதன்பிறகு கதையே மாறிப் போய்விடுகிறது.ஒரு விஷயத்தை, தர்க்க ரீதியாகவோ, சில சூழல்களை கற்பனையாகச் சொல்லியோ தவறாக புரிந்துகொள்ளும்படி செய்துவிட்டால், பிறகு இந்த மனம் அதில் இருந்து மீண்டு வராது.அதன் பிறகு இதுவரை எதெற்கெல்லாம் சந்தேகப்படவில்லையோ அது அத்தனையும் நம்மைச் சந்தேகப்பட வைக்கும்.பரதனை மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மூத்த பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்வது சாதாரணமானது, அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று இதுவரை நினைத்தாள் கைகேயி.

அது கணவன் தசரதன் செய்த திட்டமிட்ட சதி என்று நம்ப வைத்தவள் மந்தரை. அதில் அவள் வெற்றியும் பெற்று விடுகின்றாள். இந்த நிமிடத்திலிருந்து கைகேயி வேறு பெண்ணாக மாறிவிடுகின்றாள். ஆனால், தெளிவு இல்லை. பதற்றம் வருகிறது.இன்னொரு உளவியலையும் நுட்பமாக கவனிக்க வேண்டும். பொதுவாக சாதுவாக இருக்கக்கூடியவர்கள் மனதை யாராவது திரித்துவிட்டால் அல்லது தானாக தவறாகப் புரிந்து கொண்டு திரிந்து விட்டாலோ அதன் பிறகு அவர்கள் நடந்து கொள்ளும் முறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். “இவரா இப்படி நடந்து கொள்கின்றார்” என்று சொல்லும்படியாக இருக்கும். கைகேயியினுடைய நிலை அப்படித்தான் இருக்கிறது. அவள் எல்லோரிடமும் அன்பு படைத்தவளாக, குறிப்பாக தசரதனிடமும் ராமனிடமும் மிக்க அன்பு கொண்டவளாகத்தான் இருந்தாள். ஆனால், மந்தரையால் அவள் நல்ல மனம் திரிக்கப்பட்டவுடன், சாதுவான அவள் முற்றிலும் மாறுபட்ட சாகசக்காரியாகவும் பிடிவாதக்காரியாகவும், தன்னுடைய நோக்கத்தைத் தவிர வேறு எதைப்பற்றியும் காது கொடுத்துக் கேட்காதவளாகவும் மாறுவதை கவனிக்க வேண்டும்.

அவளுக்கு இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படி விடுபடுவது அல்லது வெற்றி கொள்வது என்பது தெரியவில்லை. அதற்கும் அவள் மந்தரையின் ஆலோசனையையே சார்ந்து இருக்கிறாள். தான் பற்றவைத்த நெருப்பு கைகேயியின் மனதில் எரிய ஆரம்பித்து விட்டது என்பது தெரிந்தவுடன், மந்தரை மிக ஜாக்கிரதையாக மற்றவர்கள் ஆலோசனைகளால் அந்த நெருப்பு அணைந்து விடக்கூடாது என்பதற்காக ஊதி ஊதிப் பெரிதாக்குகிறாள். தன் சொல்லுக்கு தகுந்ததுபோல கைகேயியை ஆட்டி வைக்கிறாள்.‘‘இதிலிருந்து தப்பிக்கின்ற உபாயத்தை உனக்கு சொல்ல மாட்டேனா? நான் சொல்கிறபடி செய்தால் நிச்சயம் பரதன் நாடாள்வான். நீ இந்த அரண்மனையில் சகல விதமான செல்வாக்கோடு வாழலாம். அதன் பிறகு உன்னைத்தான் எல்லோரும் (கோசலை, தசரதன் உள்பட) சார்ந்து இருப்பார்கள். அதன் பிறகு நீ வைத்தது தான் சட்டம். இதன் மூலமாக நீ உன்னுடைய தாய் தந்தையருக்கும் உறவினர்களுக்கும் நல்ல விஷயங்களைச் செய்யலாம். உன்னை மகாராணி கோலத்தில் பார்க்கும் எனக்கும் நிம்மதி’’ என கைகேயிக்கு ஆலோசனை சொல்கிறாள். இங்கு அருமையான இரண்டு கம்பன் பாடல்கள்.கம்பன் வேறு ஒரு கோணத்தில் இதை ஆராய்கிறான்.

“தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயை யும்அவர் பெற்றுள வரம் உண்மை யாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தாலும்’’
‘‘அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்அறம் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மையன் றோஇன்று
இவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்புகழ் அமுதினைப்
பருகுகின்றதுவே’’

என்ன பொருள் தெரியுமா? நல்லவர்கள் கூட சில நேரத்தில் மனம் திரிவதற்குக் காரணம் எல்லோருக்குமான ஏதோ ஒரு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். காரணம் இல்லாமல் காரியம் இல்லை.கேவலம், கூனியின் மொழிகளால் கைகேயி மனம் மாறினாள் என்று கருதிவிட வேண்டாம். அவள் மனம் மாறுவதற்குப் பின் வரும் காரணங்களும் துணை புரிந்தன. தேவர்கள் சூழ்ச்சி, அவர்கள் பெற்றுள்ள வரங்கள், அந்தணர்கள் இயற்றிய அருந்தவம், அரக்கர் பாவம், அல்லாதவர்கள் இயற்றிய அறம் இவை யாவும் கூடியே இவ்வாறு செய்தன. எனக் கூறுகிறான்.இத்துணைப் பேர்களும் கூடி இயற்றிய தவமும் அறமும் வாளா இருந்துவிடுமா? அவை அனைத்தும் பயன் தர வேண்டுமாயின், இராமன் காட்டுக்குப் போக வேண்டுமன்றோ? அவன் காடு செல்ல வேண்டுமாயின், யாராவது ஒருவர் அதற்குரிய பழியையும் சுமந்து தானே ஆகவேண்டும்? எனவே, கைகேயியின் மனம் திரியக் கூறப்பெற்றவை அனைத்தும் இரு பிரிவினுள் அடங்கும். ஒன்று தவமும் அறமும்; ஏனையது அரக்கருடைய பாவம். அறமும் பாவமும் சேர்வதில்லை. ஆனால், இப்பொழுது இவை இரண்டும் சேர்ந்தே ஒரு தொழிலைச் செய்துவிட்டன என்கிறான் கவிஞன்.பழியை கைகேயி ஏற்றதால்தானே இராமனுடைய பெருமையை இவ்வுலகம் போற்றியது. இராமனுடைய பெருமைக்குக் காரணம் கைகேயிதான். கைகேயின் இச்செயலுக்குக் காரணம் மந்தரை தான் என்று மிக அற்புதமாக கம்பன் முடிப்பான்.நமக்கு மந்தரையின் சூழ்ச்சியும் கைகேயியின் திரிந்த மனமும் அவர்களைப் பற்றிய எதிர்மறையான மனநிலையை உண்டாக்குகிறது. ஆனால் காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்ற சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டால் யாரிடமும் நமக்குக் கோபம் வராது அதைவிட ஏன் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரிந்து, அவர்கள் மீது அனுதாபம்தான் வரும்.

The post காரணம் இல்லாமல் காரியம் இல்லை! appeared first on Dinakaran.

Related Stories: