சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

‘சிதம்பர ரகசியம்’ என்பது ஒன்றுமில்லை. ‘ஒன்றுமில்லை’ என்பதுதான் சிதம்பர ரகசியம். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவசமயத்தில், ‘கோயில்’ என்று கொண்டாடப்படும் ஒரே தலம் தில்லை சிதம்பரம். பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்திற்குரிய தலமாக இது விளங்குகிறது. அந்த ஆகாயத் தத்துவத்தை விளக்குவதுதான் சிதம்பர ரகசியம். ஆகாயம் என்பது வெற்றிடம்; எதுவுமில்லாத தன்மை. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டின் விடிவெள்ளியாகத் தோன்றிய வள்ளலார், சிறு குழந்தையாக இருக்கும்போது, பெற்றோர்கள் அவரைச் சிதம்பரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே நடராஜப் பெருமானுக்கு வழிபாடு நடக்கும்போது, ‘திரை விலக்கி’ எதுவும் இல்லை என்ற ஆகாயத் தத்துவத்தை விளக்கும்போது அக்குழந்தை முகமும் அகமும் மலர்ந்து சிரித்ததாம். அதாவது, ஆனந்தத் தாண்டவனின் ஆலயத்தில், தான் கண்டுகொண்ட ஆச்சர்யத்தைக் கண்டு, அப்படிச் சிரித்ததாம். அந்த ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதுதான் சிதம்பர ரகசியம். இறைவன் ஆகாயமயமாக இருக்கிறான் என்பதே அந்த ரகசியம். ஆகாயத்திற்கு வடிவமோ, நிறமோ, உணர்வோ கிடையாது. இல்லாமல் இருப்பதுதான் ஆகாயம். இறைவன் இல்லாமலும் இருக்கிறார் என்பதே ஆகாய தத்துவம் உணர்த்துகிறது.

அதாவது, எலும்பும் சதையுமாகத் தோன்றினால்தான் இறைவன் என்றில்லை, தோன்றாமலும் அருள்பாலிக்கலாம். இதன்மூலம், இறைவன் எங்கும் தோன்றாத் துணையாக இருக்கிறார் என்பதை உணர்ந்து ஒழுக்கமாக வாழவேண்டும். சிதம்பரத்தில் இதுமட்டும் ரகசியமில்லை. சிதம்பரத்தில், நடராஜப் பெருமான் ஒற்றைப் பெருவிரலை ஊன்றி ஆடுகிற இடம்தான் உலகத்தின் மையப்பகுதி ஆகும். வெளிநாட்டிலிருந்து, மூன்று அறிஞர்கள் உலகத்தின் மையப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்டு, அது இந்தியாவில் இருக்கிறது என்று கண்டறிந்தனர். அதுவும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் சிதம்பரத்தில்தான் இருக்கிறது என்று கண்டறிந்தனர். குறிப்பாக, உலகத்தின் மையப்பகுதி நடராஜப் பெருமான்.விரலூன்றி ஆடும் இடம்தான் என்பதை அறிந்து கூறினர் என்பார் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள். இது ஒரு ரகசியம். கோயிலுக்குள் இருக்கும் இந்த நடராஜர் மட்டுமல்ல, இந்தக் கோயிலே ஒரு ரகசியம்தான்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ
புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே
சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே”
– என்பது திருமந்திரம்.

இதன் அடிப்படையில், இந்தக் கோயில் மனித உடம்பின் அமைப்பில் உருவானதாகும். இடப்பக்கம் இருக்கும் இதயமாக இங்கு இறைவன் ஆடுகிற சபையும், இறைவன் கோயிலுக்கு மேல் வேயப்பட்ட 21,600 ஓடுகள் ஒரு நாளைக்கும் நாம் விடும் மொத்த மூச்சுகளின் எண்ணிக்கையிலும் அதற்கு அடிக்கப்பட்டுள்ள 72,000 ஆணிகள், ஒரு நாளைக்கு நம் இதயத்தின் மொத்தத் துடிப்பின் எண்ணிக்கையிலும் அமைந்ததாகும். இப்படி சிதம்பரத்தில் ரகசியம் பல. வாழ்வில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசிக்கவேண்டும்.“தில்லை தரிசிக்க நிச்சயம் முக்திதான்”.

The post சிதம்பர ரகசியம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: