துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்

துலாம் ராசி ஆண்கள் எல்லோரிடமும் மனம்விட்டு பேசுகின்றவர்களாகவும், பாசிட்டிவான எண்ணம் உள்ளவர்களாகவும், செயல் வீரர்களாகவும், அமைதியாகவும், அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் கோபப்பட்டு கத்துவதோ, ஆத்திரத்தோடு அழுவதோ கிடையாது. நீதி, நியாயம் ஆகியவற்றுக்காக குரல் கொடுப்பவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல், எந்த இடத்திலும் சமாதானமாகப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனால், நிறைய நண்பர்கள் இவர்களைச் சுற்றி இருப்பதைப் பார்க்கலாம். சபதம் செய்வதிலும், ஆர்ப்பாட்டம் செய்வதிலும் இவர்களுக்கு விருப்பம் கிடையாது. அமைதியாக இருந்து எந்தக் காரியத்தையும் முடிப்பார்கள்.

தனுசு ராசிப்பெண்

துலாம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் ராசிகளில் ஒன்று குருராசியாகிய தனுசு. தனுசு ராசிப் பெண்களுக்கு எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். படைப்பாற்றல் இருக்கும். உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிடிப்பு, பாச பந்தமும் இருக்கும். தனுசு பெண்கள், துலாம் ராசி ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளும்போது, அது பொருத்தமான ஜோடியாக இருக்கும். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நம்பிக்கையும், அன்பும் கொண்டு இருப்பார்கள்.

கும்ப ராசிப் பெண்

துலாம் ராசி ஆணுக்கு, சனி ராசியில் பிறந்த கும்ப ராசி பெண்களோடு அதிகம் ஒத்துப் போகும். ஏனெனில் இருவருமே பொறுமையோடு செயல்படுகின்றவர்கள்.கும்ப ராசிப் பெண்கள் சட்டென்று தன் மனதில் இருப்பதை வெளியே காட்டுவது கிடையாது. அடுத்தவரைக் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து தன் மனதுக்குள் எடை போட்டு மதிப்பிட்டு பின்பு தான் அவர்களிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்களைத் தன் நண்பராகவோ வாழ்க்கைத் துணைவராகவோ ஏற்றுக் கொள்வார்கள். துலாம் ராசி ஆண்களும் மிகுந்த பொறுமைசாலிகள் என்பதால், இவர்களின் அன்பு கிடைக்கும் வரை இவர்களின் நம்பிக்கையைப் பெறுகின்ற வரை பொறுமை காத்துக் கிடப்பார்கள். துலாம் ராசி ஆண்களும், கும்ப ராசிப் பெண்களும் பரஸ்பரம் மரியாதையும், அன்பும் கொண்டு, ஒருவர் பால் ஒருவர் வசியம் கொண்டு இருப்பார்கள். ஒரு சில விஷயங்களில் இவர்களுக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்கூட துலாம் ராசி ஆண் கும்ப ராசிப் பெண்ணை தன் வசம் ஈர்த்துத் தன் சொல்லுக்குக் கட்டுப்பட வைத்து விடுவார். இரண்டும் காற்று ராசி என்பதனால், இருவருக்கிடையே சிந்தனையும் செயல்பாடும் ஒத்துப் போகும். இவர்களின் தாம்பத்தியமும் மிகச் சிறப்பாக விளங்கும். தங்களின் ஆசைகளை முறையாக வெளிப்படுத்தி அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இருவருமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அடுத்தவர் கண்டுபிடித்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்று காத்துக் கிடப்பதும் கிடையாது. அடுத்தவரிடம் போய் அதீத ஆர்வத்துடன் வெளிப்படுத்தி ஏமாற்றம் அடைவதும் கிடையாது. எனவே துலாம் ராசி ஆண்களும், கும்ப ராசிப் பெண்களும் பல வகையிலும் ஒத்துப்போக முடியும்.

மிதுன ராசிப்பெண்

துலாம் ராசி ஆண்கள், புதன் ராசியான மிதுன ராசிப் பெண்களுடன் அதிக அளவில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. மிதுன ராசி என்பது புதனின் ராசி, துலாம் ராசி சுக்கிரனின் ராசி, புதனும் சுக்கிரனும் சேர்ந்தால், அதை “புதச்சுக்கர யோகம்’’ என்றும் கூறுவார்கள். காரணம் இரண்டு ராசிகளும் அறிவும் அழகும் சேர்ந்து விளங்குவதைப் போல ஒன்றின் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு கவரப்பட்டு வசியப்பட்டு இணைந்து செயல்படும். இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று நேரம் ஒதுக்கி தங்களுக்கான நேரத்தை அன்போடும் பண்போடும் மகிழ்ச்சியாக செலவழிப்பார்கள். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், சுறுசுறுப்புடன் அவர்கள் வேலை செய்ய வேண்டி இருந்தாலும் தங்களுடைய காதல் துணைக்காக நேரம் ஒதுக்குவதில் அவர்கள் பின்வாங்குவதே கிடையாது. துலாம் ராசி ஆண்கள், காதல் பேச்சில் கெட்டிக்காரர்கள். உடல் வனப்பு உடையவர்கள். பேச்சில் கவர்ச்சியானவர்கள். தாங்கள் நினைப்பதை கேட்பவரின் மனம் குளிருமாறு எடுத்துக் கூறும் திறன் பெற்றவர்கள். பெண்களைக் கவரும் இந்த ஜோடி, மனதளவிலும் உடலளவிலும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு பொருத்தமான ஜோடியாக தங்களின் தாம்பத்தியத்தை மிகவும் இனிமையானதாக மாற்றிக் கொள்ளும்.

சிம்ம ராசிப் பெண்

துலாம்ராசியினர், சிம்ம ராசிப் பெண்களோடு பொருந்தி போவதுண்டு. சிம்ம ராசிப் பெண்களின் எதிர்பார்ப்புகளை ஆர்வத்தை அடக்கக் கூடிய திறமை துலாம் ராசி ஆண்களுக்கு உண்டு. சிம்ம ராசிப் பெண்கள் நேர்மையும் தன்னம்பிக்கையும் உடையவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அத்தகைய குணங்கள் துலாம் ராசி ஆண்களுக்கு இருப்பதால், இவர்கள் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்படுவர். துலாம் ராசி ஆண்களின் உடல் கவர்ச்சியும், உரையாடல் ஜாலமும் சிம்ம ராசிப் பெண்களை அதிகம் கவரும். உலகத்திலேயே தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் போல வேறு எவருக்குமே கிடைத்திருக்காது என்ற அளவிற்கு துலாம் ராசி ஆண்களை ரசித்து ருசித்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்துவார்கள். இவர்களுக்குள் பல நுட்பமான விஷயங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பும் ஆர்வமும் கொள்ள வைக்கும். பொது இடங்களில் இவர்கள் இருவரையும் பார்க்கும்போது பொருத்தமான ஜோடி என்று உலகம் வியக்கும் வகையில் அவ்வளவு அழகாகத் தங்களை வெளிப்படுத்துவர். ஒருவரை ஒருவர் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருப்பதால் விருந்து விழாக்களில் இவர்களை எட்ட நின்று பார்க்கவும் கிட்டே வந்து பேசவும் ஆட்கள் விரும்புபவர். இந்த ஜோடியின் வாழ்க்கையில் நிறைய குட்டி குட்டி சந்தோஷங்களும் பெரிய வியப்பும் விந்தையும் இடம்பெறும். சிம்ம ராசிப் பெண்களுக்கு வரக்கூடிய கோபதாபங்களைச் சரியாக சமாளிக்கத் தெரிந்தவர்கள் துலாம் ராசி ஆண்கள் எனலாம். பெரிய யானையையும் ஒரு அங்குசம் தானே கட்டுப்படுத்துகின்றது. அது போல, சீறிவரும் பெண் சிங்கத்தை துலாம் ராசி ஆணின் மர்மப் புன்னகை, கண் சிமிட்டல், விரல் சொடுக்கு அமைதிப்படுத்திவிடும் துலாம் ராசி ஆணின் காதல் சூட்சுமங்களுக்கு சிம்ம ராசிப் பெண்கள் அடிமை ஆகிவிடுவார்கள்.

துலாம் ராசிப் பெண்

துலாம் ராசி ஆண்களும், துலாம் ராசிப் பெண்களும் ஜோடி சேர்ந்தால், இருவரின் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்று போலவே இருக்கும். இதனால், அவற்றைத் தங்களுக்குள் பேசி முடிவு செய்து நிறைவேற்றிக் கொள்வார்கள். மேலும், இவர்கள் வாழ்க்கை கோபதாபங்கள் மிகுந்ததாக இல்லாமல், அன்பும் பண்பும் அறிவும் நிறைந்ததாக சமன்பட்ட வாழ்க்கையாக சமாதானம் நிறைந்த வாழ்க்கையாக விளங்கும். இந்த ஜோடி நீண்ட காலத்துக்கு நிறைவான மனதுடன் வாழ்வது உறுதி. இவர்களின் வாழ்க்கையில் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்காது. இவர்கள் நண்பர்களாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி ஒருவரை ஒருவர் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, பின்பு திருமண வாழ்க்கையில் இணைவார்கள். ஆனாலும் தாம்பத்திய வாழ்வு இவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து கலந்து பேசி தங்களின் எதிர்பார்ப்புகளைத் தெரிவித்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள, பொறுமையுடன் செயல்பட வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இவர்கள் தங்களுக்குள் சமாதானமாகப் போய்விட்டால், இந்த ஜோடியும் உலகின் மகிழ்ச்சியான ஜோடியாக இருக்கும்.

 

The post துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண் appeared first on Dinakaran.

Related Stories: