கைகளில் உள்ள ரேகைகள் மனிதனின் எதிர்காலத்தை உணர்த்துமா?

?கைகளில் உள்ள ரேகைகள் மனிதனின் எதிர்காலத்தை உணர்த்துமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

உணர்த்தும். இந்த உலகில் பிறக்கும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ரேகை அமைப்பு என்பது தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. ஒருவருடைய ரேகை அமைப்பு என்பது இந்த உலகிலுள்ள வேறு யாருக்கும் இருப்பதில்லை. ஏற்கெனவே வாழ்ந்து முடித்து தற்போது உயிருடன் இல்லாத மனிதர்களின் ரேகை அமைப்பு கூட தற்போது உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கும். மனிதர்களின் ரேகை அமைப்புடன் ஒத்துப் போவதில்லை. ஆண்டவனின் படைப்பினில் அமைந்திருக்கும் பேரதிசயங்களுள் ஒன்றாவே இந்த கைரேகை என்பது பார்க்கப்படுகிறது. இதனை அறிந்துதான் நம்முடைய முன்னோர்கள் கைரேகை சாஸ்திரத்தைப்பற்றி ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு பார் கோடு அல்லது க்யூ&ஆர் கோடு என்பது எப்படி தனித்துவம் பெற்றதாக இருக்கிறதோ அதுபோன்ற அமைப்பினை கைரேகைகளின் மூலமாக இயற்கையாகவே நாம் பெற்றிருக்கிறோம். கைரேகையைக்கொண்டே ஒரு மனிதனின் வாழ்வியல் நிலையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அதனை துல்லியமாகக் கணக்கிட்டு சொல்பவர்கள்தான் குறைந்து கொண்டே வருகிறார்கள். இந்த கைரேகை சாஸ்திரம் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

?ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்கிறார்களே, இது உண்மையா?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

‘ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் அதனால் சிரமம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையில் ஆனி மூலம் அரசாளும், பெண்(கன்னி) மூலம் நிர்மூலம் என்பதே ஆகும். அதாவது, ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி. அதனால்தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது. ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் வளமுடன் வாழ்வார்கள் என்பதே இதன் பொருள். பெண் மூலம் என்பது கன்னி மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரநாள். இது அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். துர்காஷ்டமி அல்லது ஆயுதபூஜையோடு இணைந்து வருகிற நாள். இந்த நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கிய நாள் என்பதால் பெண்(கன்னி-புரட்டாசி) மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கு தோன்றியது. அதாவது புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் அசுர சக்திகளுக்கு எதிராக அதாவது அதர்ம வழியில் நடக்கும் அக்கிரமக்காரர்களை அடக்கும் விதமாக சிறந்த ஆற்றலைப் பெற்றிருப்பார்கள் என்பது அதன் பொருள். அதன் உண்மையான அர்த்தத்தை உணராமல் மூல நட்சத்திரத்தில் பெண்குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.

?விளக்கு வைத்த பிறகு எந்த பொருளைத் தரக்கூடாது?
– வண்ணை கணேசன், சென்னை.

பொருள் என்றாலே செல்வம்தானே. எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்கு மதிப்பு என்பது இருக்கும் அல்லவா.. ஆக விளக்கு வைத்தபின் எந்தப் பொருளாக இருந்தாலும் அதனை கடனாகவோ அல்லது தானமாகவோ தரக்கூடாது. மகாபாரதக் கதைகளில் கூட கர்ணன் தான தர்மத்தினைச் செய்யும்போது அதனை சூரிய அஸ்தமனத்திற்குள் செய்துவிடுவான் என்பதைப் படித்திருக்கிறோம் அல்லவா. இதுபோன்ற புராணக் கதைகளின் மூலமாக விளக்கு வைத்தபின் அதாவது சூரியன் மறைந்த பிறகு எந்தப் பொருளையும் பிறருக்குத் தரக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்த விதியானது அவசரம், ஆபத்து மற்றும் விபத்துக் காலங்களுக்குப் பொருந்தாது. அது எந்த நேரமாக இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக பொருளைத் தந்து உதவ வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?பொது இடங்களில் அன்னதானம் போடுவதை வாங்கிச் சாப்பிட்டால் அவர்கள் செய்யும் பாவம் நம்மை வந்து சேரும் என்பது உண்மையா?
– முருகன்.

நாம் சாப்பிடும் உணவினில் பலவிதமான தோஷங்கள் என்பது உண்டு. அர்த்த தோஷம், ஸம்ஸ்கார தோஷம், ஸ்தான தோஷம், நிமித்த தோஷம் என்றெல்லாம் பல வகையான தோஷங்களைப்பற்றி சாஸ்திரம் பேசுகிறது. சட்டவிரோதமாக குறுக்கு வழியில் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் சமைக்கப்பட்ட உணவு, குளிக்காமல் பல் துலக்காமல் நம் உடலை தூய்மையாக வைத்திருக்காமல் சமைக்கப்படும் பண்டங்கள், குளியலறை மற்றும் கழிவறைக்கு அருகில், சண்டை சச்சரவு உள்ள இடங்களில் சமைக்கின்ற உணவு, தெளிவற்ற சஞ்சலமான மற்றும் சோகமான மனநிலையில் சமைக்கப் படும் உணவு ஆகியவற்றை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு என்பது கண்டிப்பாக உண்டாகும். பொது இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தில் இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க இயலாது.

அதே நேரத்தில் ‘அன்னம் ந நிந்த்யாத்’ என்று வேதம் சொல்கிறது. அதாவது அன்னத்தை பழிக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ கூடாது என்பது அதன் பொருள். அதுபோன்ற இடங்களில் அன்னதானத்தைப் பெறும்போது இறைவா இதனை உனது பிரசாதமாக, இந்த நேரத்தில் நீ எனக்குத் தந்த கொடையாக எண்ணி உட்கொள்கிறேன் என்ற எண்ணத்தோடு ‘‘ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்’’ என்ற வார்த்தையைச் சொல்லிவிட்டு சாப்பிடும்போது எந்த தோஷமும் நம்மை அண்டாது. அதேபோல ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை எந்தவிதமான தயக்கமும் இன்றி வாங்கிச் சாப்பிடலாம். ஆலயத்தில் இறைவனுக்கு நைவேத்யம் என்பது செய்யப்பட்டு அன்னதானம் செய்யப்படுகிறது. இறைவனின் பார்வை படுவதால் அதில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடுகிறது. ஆண்டவனின் சந்நதியில் வழங்கப்படும் அன்னதானத்தில் தோஷம் எதையும் பார்க்காமல் இறைவனின் பிரசாதமாக எண்ணிச் சாப்பிட வேண்டும். அதனால் நமக்கு எந்த பாவமும் வந்து சேராது.

The post கைகளில் உள்ள ரேகைகள் மனிதனின் எதிர்காலத்தை உணர்த்துமா? appeared first on Dinakaran.

Related Stories: