கடத்தப்படவிருந்த கல்யாண மண்டபம்!

வேலூர் கோட்டை புகழ் பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயம். பல நூறு ஆண்டுகள் பழமையானது. புயல், மழை, வெயில் என இயற்கை உபாதைகளைச் சகித்துக் கொண்டு, வயதேறி மங்கிய நிறத்தோடு இருந்தாலும், கம்பீரமாகக் காட்சியளிக்கிறது ஆலயம். இருபுறமும் நீண்டு கூர்மையாகத் திரும்புவது அதன் சிறப்பு. வெட்டிவிடும் கூர்மையை எட்டத்திலிருந்துகூட உணர முடியும். அழகிய கோபுர வாசல்! உள்ளே நெஞ்சையள்ளும் வரலாற்றுச் சின்னங்கள் உறங்குகின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது. உள்ளே, மரப் படிகள் கொண்டு ஏழு நிலைகளில் கோபுரம் எழிலாகக் காட்சியளிக்கிறது.

உயரமான சுவரில் குள்ளமாக இருவர் சிலைகள் காட்சியளிக்கின்றன. சற்று பருமனாக இருப்பவர் சதாசிவ மகாராயர் மற்றவர் சிற்றரசர் பொம்மி ரெட்டு மகாராயரின் ஆதரவில் பொம்மிரெட்டு இந்தக் கோயிலைக் கட்டி முடித்திருக்கிறார். கோயிலைக் கட்டிய சிற்பிகள் கலையம்சம் நிறைந்த சிலைகளையும், சிற்பங்களையும் எத்தனை எத்தனை விதமாக, நுணுக்கமாக, அழகு கொஞ்ச, எவ்வளவு அடக்கமாக, எத்தனை சின்னதாக கோபுர வாயிற்சுவரில்செதுக்கியிருப்பது அற்புதம். ஆலய வாசலைத் தாண்டி உள்ளே சென்றால், இடது புறம் இருப்பது காண்பவர்களின் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் கலையம்சம் நிறைந்த அற்புதமான ‘கல்யாண மண்டபம்’ புகழ் பெற்ற மண்டபம். பலராலும் பாராட்டப் பெற்றது. இந்தக் கல்யாண மண்டபத்தின் அருமை பெருமைகளை பற்றி அறிவோம் வாருங்கள்!

அது ஒரு கலைக்களஞ்சியம். அங்கே ‘கல்’ என்ற நாமதேயமே தெரியவில்லை. அற்புதமான சிற்பங்களும், அதன் மீது பூ வேலைப் பாடுகளும் அப்படிப் பரவியிருந்தன. பிரம்மாண்டமான தங்க நகைப் பேழையில் நவரத்தினங்களைக் கொட்டி வைத்திருப்பது போல, தோன்றியது அந்தக் கல்யாண மண்டபம். அது ஒரு சிற்பப் பொக்கிஷம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிற்பிகளின் கற்பனைகள் அத்தனையும் அங்கே உறைந்து கிடந்தன. கல் எல்லாம் கலைகள். முன்னே முகப்பு மண்டபம். அதனுள் உள்மண்டபம்.அதன் நடுவில் ஒரு மேடை. முகப்புத் தூண்களில் அத்தனையும் யாளிகளும் குதிரைகளும் முன் கால்களைத் தூக்கிய வண்ணம் நிற்கின்றன.

கீழே மட்டும் கால்களை வைத்தால், எங்கே பாய்ந்துவிடுமோ என்று நினைக்கிற வகையில் ஒரு வேகம் அந்தக் கால்களில் துலங்குகின்றது. குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் வீரர், நம்மைச் சலனமில்லாப் பார்வை பார்க்கிறார். குதிரையின் கடிவாளங்களில் வளையங்கள். ஒன்றுக் கொன்று நேர் வரிசையில் இராமல் கலைந்து கிடக்கின்றன. அப்படிக் கலைத்துக் காட்டுவதே சிற்பியின் அரிய வேலைப்பாடு. கல்யாண மண்டபத்தின் உள்ளே உள்ள தூண்கள் எல்லாம் கலைக் களஞ்சியமாகக் காட்சியளிக்கின்றன. அவையெல்லாம் அற்புத வடிவங்களில் கண்ணைக் கவரும் வண்ணம், அரும்பாடு பட்டு, செதுக்கியிருக்கும் சிற்பிகள்எல்லாமே கொள்ளை அழகு.

ஒரு புறம் கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்சரஸ்கள், நடனமாதர்கள், யாளிமுகப் பறவைகள், வேடர், மறவர், குறவர் என்று வரிசை நீள்கிறது. தெய்வங்களை மட்டும் விட்டு வைப்பார்களா? மகாவிஷ்ணு, சிவபெருமான், மகாகணபதி என்று சைவ, வைணவ பேதமில்லாமல் பற்பல தெய்வங்கள் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் மிக ரம்மியமாகவும், துல்லியமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தூணில் இருக்கும் ரதியோ அழகோ அழகு. ரதி, கிளியில் பறக்கிறாள்.

அவளது அவசரத்தைப் பார்த்தால், தூணை விட்டுப் பறந்துவிடுவாள் போல் தோன்றுகிறது.ஒரு பக்கம் உக்கிரமும் அழகும் நிறைந்த கம்பீரமான தோற்றத்தில் நரசிம்மர், அசுரன் உடலை வகிர்ந்து நரம்பை மேலே இழுக்கிறார். நரசிம்மனின் தோற்றம் நல்ல பிரத்தியட்சம்.ஒரே உருவத்தை வெவ்வேறு சிற்பிகள் வெவ்வேறு கற்பனையில் விதவிதமாகச் செதுக்கியிருக்கிறார்கள். அதில் ஓர் அம்சமான சிற்பம், நரசிம்மர் இரண்யனைப் பற்றி இழுக்கிறார்.

இன்னொரு சிற்பத்தில், அவன் வயிற்றைப் பிளக்கிறார். நரசிம்மரின் அந்த எட்டு கைகளும் எத்தனை ஆத்திரத்தோடு அவசர கதியில் வேலை செய்கின்றன. எட்டுக் கைகளையும் நியாயப்படுத்துகின்ற அழகே அழகு! மூன்றாவதாக ஒரு நரசிம்மர், தமது உத்தரீயம் நெகிழ ஆசுவாச நிலையில் அமைதியாக நிற்கிறார். அது அசுரனைக் கொன்ற பின் உண்டான அமைதி!கண்ணன் உறியில் ஏறுகிறான். சகாக்கள் உதவி செய்கிறார்கள்.கோபி ஒருத்தி கோபமாக அவர்களைப் பிடிக்கப் பாய்கிறாள், அது ஒரு அற்புதமான நாடகம் என்று நன்றாகத் தெரிகிறது. மற்றொரு பக்கம், மரத்தின் மீது கண்ணபரமாத்மா துகிலோடு அமர்ந்திருக்கிறார்.

கீழே கோபியர்கள் கை கூப்பி வேண்டிய படி நிற்கிறார்கள். இன்னொரு புறம், பிரிய ராதையுடன் அழகான
அபிநயத்துடன் சல்லாபமிடுகிறான் கண்ணன். மூன்று வளைவுகளுடன் திரிபங்கி ஆசனத்தில் நின்று குழல் ஊதிக் கொண்டிருக்கிறார், வேணு கோபாலர்.அருகே கைகூப்பி வணங்கிய நிலையில் கருடபகவான் காட்சியளிக்கிறார். எல்லாமே அற்புத வடிவங்களே; அதிசயிக்கத்தக்க வேலைப்பாடுகள். மேலும், குழந்தை வடிவில் தவழும் விநாயகப் பெருமான் ஒருபுறம் காட்சி தருகிறார். அரிய கற்பனை? மற்றொரு புறம் கண்ணப்ப நாயனார் தனது ஒரு கண்ணை அம்பு கொண்டு குடைகிறார்.

சிவலிங்கத் திருமேனியிலிருந்து எழுந்த பரமனின்கை அவரைத் தடுக்கிறது. கணபதி ஆட, மத்தளம் தட்டுகிறார் நந்தி. இன்னும் இருக்கிறது ஆச்சரியமூட்டும் சிற்பங்கள்! ஒரு பக்கம் பரிதாபமான தோற்றத்தில் சோகமாக ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். இன்னொரு பக்கம் தோரணக்கால் போட்டு இன்னொருவர் கம்பீரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அருகே, ஜடாமுடியுடன் ஒரு முனிவர் உபதேசிக்கும் பாவனையில் இருக்கிறார்.

ஒருபுறம் மலையைத் தூக்குகிறார் மாருதி. கல்யாண மண்டபத்தில் ஒருபுறம் பெண்களின் தோற்றம் பல விதமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. பாதி கலைந்த ஆடையுடன் ஒருத்தி இடுப்புக்குக் கீழ் தொடை, மீது நெகிழ்ந்த ஆடையுடன் ஒருத்தி. இது போன்ற நிலையில் பெண்களின் தத்ரூப உடல் அமைப்பை எப்படியெல்லாம் கற்பனை செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து அசத்தியிருக்கிறார்கள் சிற்பிகள்!இப்படி எத்தனை எத்தனையோ? இவற்றில் துளி விரசம் இல்லை. மறைவான பகுதிகள் கலை நயத்தோடு காட்சியளிக்கின்றன. சிருங்கார இயல்கூட வாழ்க்கை தானே? ஒன்பது ரகங்களில் அதுவும் ஒன்று தானே? கற்பனை வளம் நிறைந்த சிற்பிகள் விட்டு வைப்பார்களா? காணுமிடமெல்லாம் கலையம்சம் நிரம்பி வழிகிறது.

எத்தனை எத்தனை காட்சி தரும்! சிற்பிகள், உண்மையில் விருப்பம் போல் விளையாடி இருக்கிறார்கள்.கி.பி.14-ஆம் நூற்றாண்டில், இந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. கி.பி.16-ஆம் நூற்றாண்டில், விரிவாக்கப்பட்டது என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். விஜயநகர மன்னன் சதாசிவ தேவமகாராயரின் கீழ் பணிபுரிந்து வந்த சிற்றரசர் சின்ன பொம்முரெட்டி, இக்கோயிலைக் கட்டி முடித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆயின. கி.பி.1792 முதல் 1857 வரை, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நடைபெற்றது. கி.பி.1799-ல் தென்னிந்தியாவில் ஹைதராபாத், புதுக்கோட்டை, மைசூர், திருவாங்கூர் சமஸ்தானங்கள் தவிர, மீதிப் பகுதிகள் அனைத்து கம்பெனியின் நிர்வாகத்தின் கீழ் வந்தன.

ஜலகண்டேஸ்வரர் கோயில் கல்யாண மண்டபம், நம் நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்தது போலவே, வெள்ளையர்களையும் கவர்ந்தது.ஆங்கிலேய ஆட்சியாளர்களான வைசிராய்கள், கவர்னர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோர் கண்டு வியந்து மெய் மறந்து நின்றனர். கலையம்சம் நிறைந்து பொக்கிஷமாகத் திகழ்ந்த அந்தக் கல்யாண மண்டபத்தைத் துண்டு துண்டாக வெட்டி, அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘பிரைட்டன்’ அருங்காட்சியகத்தில், முன்மாதிரி இருந்த படியே அமைத்து நிறுவ ஏகமனதாக முடிவு செய்தார்கள்.

கட்டிடக் கலை வல்லுநர்களையும், கட்டிடப் பொறியாளர்களையும் வரவழைத்து திட்டம் தீட்டினார்கள். கல்யாண மண்டபத்தை அப்படியே இங்கிலாந்து நாட்டுக்குக் கடத்திச் செல்ல, பிரிட்டனிலிருந்து பிரம்மாண்டமான கப்பல் ஒன்றை வரவழைத்தார்கள். அதற்கான வேலையைத் தொடங்க முயற்சித்த போது, இங்கிலாந்திலிருந்து இந்தியாவை நோக்கி விரைந்து வந்த பிரம்மாண்டமான கப்பல், எதிர்பாராமல் ஏற்பட்ட புயல், சூறாவளியில் சிக்கிச் சிதறுண்டு, சின்னாபின்னமாகி கடலில் மூழ்கியது. அதாவது ஜலகண்டேஸ்வரர் அருளால், அந்தப் பெரிய கப்பல் ஜலசமாதியானது. கோடிக் கணக்கான மதிப்புள்ள கலைப் பொக்கிஷமாகத் திகழும் ‘கல்யாண மண்டபம்’ காப்பாற்றப்பட்டது. பரங்கியரின் திட்டம் பகற்கனவாய்ப் போனது.

டி.எம்.ரத்தினவேல்

The post கடத்தப்படவிருந்த கல்யாண மண்டபம்! appeared first on Dinakaran.

Related Stories: