இந்த வார விசேஷங்கள்

காரைக்கால் அம்மையார் இறைக்காட்சி பெறும் விழா
22.6.2024 – சனி

மாங்கனித் திருவிழா என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவுகூருமுகமாக, காரைக்காலிலுள்ள சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீ கயிலாசநாத சுவாமி கோயில் சார்பில் நடத்தப்படும் திருவிழா ஆகும். இவ்விழாவை 4 நாட்கள் நடத்துவர். நடப்பாண்டு விழா ஜூன் 19-ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு, அடுத்தநாள் 20.6.2024 காலை திருக்கல்யாணம் (பரமதத்தர் புனிதவதி திருமணம்), மாலையில் வெள்ளைசாற்றி புறப்பாடு, மூன்றாம் நாள் (21.6.2024) காலை பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா, மாலையில் அமுது படையல், அடுத்தநாள் அம்மையார் இறைவனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற உள்ளன. இதில், பக்தர்கள் மாங்கனிகளை வீசிஎறிந்து வழிபாடு செய்யும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு சிறப்பானது. மாங்கனி திருவிழாவில் பங்கேற்று அம்மையை தரிசிப்பதே பெரிய புண்ணியம். மேலும், இங்கு மாங்கனி இறைப்பவர்கள் யாவரும், அம்மையிடம் ஏதேனும் வேண்டி அது அடுத்த ஆண்டு நடந்த பின்னர்,அம்மைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மாம்பழங்களை இறைக்கின்றனர். இன்று, 22.6.2024 சனிக்கிழமை இறைவன் அம்மையாருக்கு காட்சி தந்து ஐக்கியமாகும் விழா.

திருவோண விரதம்
25.6.2024 – செவ்வாய்

மகாவிஷ்ணு திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பார்கள். குறிப்பாக, வாமன அவதாரம் நிகழ்ந்தது திருவோணத்தில். ‘‘திருவோணத்தான் உலகாளும் என்பர்களே’’ என்பது பெரியாழ்வார் வாக்கு. இந்த திருவோணத்தில் பெரும்பாலான திருமால் ஆலயங்களில் திருமஞ்சனம் நடைபெறும். சில இடங்களில் சுவாமி புறப்பாடும் உண்டு. இன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவுக்குரிய விஷ்ணுசஹஸ்ர நாமம் போன்ற தோத்திரங்களைப் படித்து, ஆழ்வார் களின் பாசுரங்களை ஓதி வழிபடுவதன் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.

சங்கடஹர சதுர்த்தி
25.6.2024 – செவ்வாய்

எந்தத் தடைகளாக இருந்தாலும், அது விலகுவதற்கு விநாயகரை வழிபட வேண்டும். எந்தப் பூஜைகளிலும் அவருக்கு முதலிடம் உண்டு. சதுர்த்தி நாள் அவருக்குரிய விசேஷமான நாள். சங்கடங்களை எல்லாம் போக்குகின்ற நாள் என்பதால், சதுர்த்தி நாளில் விரதம் இருந்து, அறுகம்பூ மாலையைச் சாற்றி, ஆனைமுகத்தோனை வணங்க வேண்டும். இன்று விரதம் இருந்து அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று மாலையில் நடைபெறும். அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தினால் ஆயுள், ஆரோக்கியம் வளரும். இஷ்ட சித்திகள் அதாவது நம்முடைய எண்ணங்கள் பலிக்கும்.

திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் தேரோட்டம்
25.6.2024 – செவ்வாய்

108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில், 100-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தை திருமங்கை யாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். மூலவர்: நின்ற நாராயணப் பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்), தாயார்: செங்கமலத் தாயார் (கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி), தீர்த்தம்: பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி, ஆகமம்: வைகானஸ ஆகமம், விமானம்: சோம சந்திரவிமானம். சூரியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இத்தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் உள்ளார். முன்னிருகரங்கள் வணங்கிய நிலையில் இருக்க, பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார். தானே சிறந்தவள் என்பதைநிரூபிக்க, ஸ்ரீ தேவி, வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு, தங்காலமலை பகுதிக்கு (திருத்தங்கல்) வந்து தவம்புரிந்தார். ஸ்ரீ தேவியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இத்தலத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, ஸ்ரீ தேவியே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். இதனால், இத்தலம் ‘திருத்தங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தில், 9-ம் நாள் தேரோட்டம் இன்று.

காஞ்சிபுரம்
ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
ஜேஷ்டாபிஷேகம்
25.6.2024 – செவ்வாய்

மாதங்களில் ஆனி மாதத்திற்கு ஜேஷ்ட மாதம் என்று பெயர். மாதங்களிலேயே பெரிய மாதம் இது. மாதங்களிலே அதிக பகல் கொண்ட மாதம் இது. அதனால் சூரியன் இந்த மாதத்தைக் கடப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக்கொள்கின்றது. எனவே, இந்த மாதத்தில் வைணவக் கோயில்களில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.ஜேஷ்ட நட்சத்திரம் என்றால், கேட்டை நட்சத்திரம். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகம் என்பதால், இதற்கு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர். இது ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. சில கோயில்களில் ஆனிமாத கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும். சில கோயில்களில் ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியில் நடைபெறும். இந்த ஜேஷ்டாபிஷேகம் குறித்து ஆகம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பெருமாளுக்கு சாதுர்மாஸ்ய சங்கல்பம் உண்டு. ஆனி மாதத்தில் வளர்பிறை ஏகாதசியில் பெரிய திருமஞ்சனம்
கண்டருளுகிறார். பின்பு யோக சயனத்தில் ஆழ்கிறார். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியில் அவர் புரண்டு படுத்துக்கொள்கின்றார். அப்பொழுது நடைபெறும் உற்சவம் பவித்ர உற்சவமாகும்.

அதனை அடுத்து இரண்டு மாதம் கழித்து பெருமாள் கைசிக புராணம் கேட்கிறார். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியில் பரமபத அனுபவத்தைக் காட்டுகின்றார். இதில் ஆனிமாத வளர்பிறை ஏகாதசி திருமஞ்சனமே
ஜேஷ்டாபிஷேகம் எனப்படுகின்றது.காஞ்சி பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ஆனி மாதம் திருவோணம் அன்று காலை தினசரி செய்ய வேண்டிய திருவாரா தனம் முதலிய நிகழ்ச்சிகள் நடந்த பின்னால் கைசிகப் புராணம் ஹஸ்திரி மகாத்மியம் வாசித்த தாதாச்சாரியார் மூலம் அலங்கார திருமஞ்சனம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரப்படும் பெருமாள் திருமலையில் துவாரபாலகர்கள் முன் மண்டபத்தில் உள்ள கோலப்படிக்கட்டில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுடைய மேல் மற்றும் உள் சொர்ண கவசங்கள் களையப்படும். உபயநாச்சிமார்கள் (ஸ்ரீ தேவி, பூதேவி) சொர்ண கவசங்களும் களையப்பட்டு அவைகள் பழுது பார்ப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். பெருமாளுக்கு முன் இரண்டு திரைகள் இடப்படும்.

பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் சந்தனம், வெட்டிவேர், பரிமளங்கள் சேர்த்த சுத்த தீர்த்தத்தினால் ஸ்ரீ பெருமாளுக்கும் நாச்சிமார்களுக்கும் ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். வருடத்தில் இம்மாதிரி திருமஞ்சனம் நடைபெறுவது ஜேஷ்டாபிஷேக உற்சவத்தன்று மட்டுமே. கவசங்களை களைந்து நடக்கும் திருமஞ்சனமும் இந்த நாளில்தான். திருமஞ்சனமான பின் திரு அபிஷேகத்தை மட்டும் முன்னடியாக சுத்தம் செய்து போர்வை சமர்ப்பித்துக் கொண்டு பெரிய மணி சேவிக்க பிரசாதங்களை அமுது செய்தருள்வார். சாதாரணமாக ஜேஷ்டாபிஷேகம் நாளிலிருந்து ஒரு மண்டல காலம் பெருமாளுக்கு உற்சவங்கள் நடக்காது. கவசங்களுக்கு பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனமும் உள் சாத்து வஸ்திரமும் சமர்ப்பிக்கிற படியால், அவை நன்றாக உலருவதற்கு கால அவகாசம் வேண்டும்.

திருவல்லிக்கேணி
ஸ்ரீ ரங்கநாதர் வசந்த உற்சவம் மூன்று நாட்கள்
27.6.2024 – வியாழன்

“இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன், நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி
வாயுரை தூது சென்று இயங்கும்
என்துணை எந்தை தந்தை தம்மானை’’

திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, திருத்தலம் சென்னையில் புகழ் பெற்ற தலம். என்ன சிறப்பு என்றால், பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. ரங்கநாதர் சந்நதியில் சுவாமியின் திருமுடிக்கு அருகில் வராகரும், திருவடிக்கு அருகில் நரசிம்மரும் உள்ளனர். இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன. அதனால் ஒவ்வொரு மூலவருக்கும் தனித் தனி உற்சவங்கள் நடக்கும். இன்று முதல், ஸ்ரீ ரங்கநாதருக்கு 3 நாட்கள் வசந்த உற்சவம்.

காஞ்சி பெருந்தேவி
தாயார் ஜேஷ்டாபிஷேகம்
28.6.2024 – வெள்ளி

ஸ்ரீ பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடக்கும் அதே வார வெள்ளிக் கிழமை, தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்படும். சுமார் காலை 9 மணி அளவில் பரிவார மேள தாளங்களுடன் அலங்கார திருமஞ்சனம் செய்யப்படும். தாயாருக்கு சிறப்புக் கவசங்கள் கிடையாது. பழுது பார்க்க வேண்டிய வேலைகளும் அதிகம் கிடையாது. மாலை 4 மணி அளவில், கவசங்கள் சுத்தம் செய்யப்பட்டு சமர்ப்பித்து இந்த உற்சவங்களை நடத்துவார்கள்.

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: