தோல் நோய்களை குணப்படுத்தும் சிசிலேஸ்வரர்

கர்நாடகாவின் தட்சண கன்னட பகுதியில், பெல்தன்குடி தாலுக்காவில், சிசிலா என்ற கிராமத்தில், 800 ஆண்டு பழமையான கோயில் உள்ளது! இந்த கோயில் ஈசன், ஒரு சமயம் குமரகிரி மலையில் இருந்தார். இந்த பகுதியில் தவம் செய்து, வந்த ஒருசன்யாசி; தினமும் இங்குள்ள கபிலா நதியிலிருந்து, ஒரு குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மலை ஏறி, அங்கிருந்த ஈசன் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, அங்கு கிடைக்கும் பூக்களை பறித்து பூஜை செய்து திரும்புவார். ஒரு நாள், அப்படி தண்ணீர் எடுத்துக் கொண்டு கிளம்பிய போது, கல் தடுக்கி குடத்துடன் கீழே விழுந்தார்! காயம் ஏற்பட்டது. அப்போது சன்யாசி, ‘‘ஈசனே… என்னால் தினமும் நீர் எடுத்து பூஜிப்பது கஷ்டமாக உள்ளது. நீயே… கொஞ்சம் கருணை காட்டி இங்கேயே நிரந்தரமாய் இருந்து விடக் கூடாதா?! என வேதனையுடன் வேண்டினார்.

அந்த வேண்டுதல், ஈசன் காதில் கேட்டது. ஈசன், நேரில் வந்து சன்யாசிக்கு காட்சி தந்தார். ஆசிரியும் வழங்கினார். அப்போது சன்னியாசி, ‘‘தாங்கள் இங்கேயே நிரந்தரமாய் தங்கி, எனக்கும், கிராமத்திற்கும் உதவ வேண்டும் என்றார்! ஈசனும் அப்படியே ஆகட்டும் எனக் கூறி, தன்னை, லிங்கமாக்கினார். உடனே அங்கு அந்த சிவலிங்கத்தை சன்னியாசி பிரதிர்ஷ்டை செய்து வழிபடலாயினார். காலத்தால் அங்கு கோயில் எழுந்தது.

இந்த கோயில் மக்களிடம் பிரபலம் அடைய என்ன காரணம்?

அருகில் ஓடும் கபிலர் ஆற்றில், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நதி புனிதமாக கருதப் படுகிறது. அங்கு மகாசிர் என்ற மீன்களை அதிக எண்ணிகையில் காணலாம். அவை புனிதமானவையாக கருதப்படுகின்றன. மீன்பிடிக்கவோ, கொல்லவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது! இந்த புனிதமானன மீனுக்கு அரிசி, பொரி, அவல் போட்டால், தோல் வியாதி உள்ளவர்களுக்கு அது குணமாகும் என நம்பிக்கையுள்ளது. இங்கு மகாசீரை தவிர்த்து, 40வகையான மீன்கள் உள்ளன. இந்த ஆற்றில் இரண்டு பாறைகள் உள்ளன. அவற்றை ஹூலுகலு (புலி) மற்றும் தனகல்லு (பசு) என அழைக்கின்றனர். அசப்பில் அந்த பாறைகளும் அப்படிப்ப இருக்கும். அதன் கதை;

ஒரு பசுவை, புலியொன்று துரத்திவந்தது. இரண்டுமே நதிக்கரையை அடைந்தன. நடந்ததை லிங்கமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த சிவனுக்கு, தனக்கு எதிரே ஒரு கொலை நடப்பதை விரும்பவில்லை. உடனே அவை இரண்டையும் நதிக்குள் இறங்கி ஓட வைத்து, பாறைகளாக மாற்றிவிட்டார்! இந்த பாறைகள் இன்று வரை உள்ளன.வருடாந்தரமாக, 7 நாட்கள் திருவிழா நடக்கும் போது, இவையும் பூஜிக்கப்படுகின்றன (மே மாதம்). கபில ரிஷி தவம் செய்த இடம். இதனால் இந்த நதியே கபில்
நதியானது!

இனி கோயிலுக்கு போவோமா!

கபிலா நதியை குறுக்காக கடந்துதான் கோயிலுக்கு செல்ல முடியும். தரைபாலம் ஒன்றும், தொங்கும் பாலம் ஒன்றும் உள்ளது! தொங்கு பாலத்தை மழைகாலத்தில் பயன்படுத்தலாம். நாம் தொங்கு பாலம் வழியாக சென்றோம். மறுகரையில் இறங்கி, சிறிது நடந்தால் கோயில் வந்துவிடும். கேரளாபாணி, மங்களுரு ஸ்டைல் கோயில்…! முன்கோபுரம் என எதுவும் கிடையாது. ஓடுவேயப்பட்ட கோயில்! கோயிலுக்குள் நுழைந்து கர்ப்ப கிரகம் நோக்கி பயணித்தால், துவஜஸ்தம்பம் முதலில் வரவேற்கிறது. அடுத்த கர்ப்ப கிரகத்துக்கு எதிரே சுவாமியை பார்த்தபடி ஒரு நந்தி உள்ளது. அதனையும் தரிசித்து தாண்டி உள்ளே தொடர்ந்து சென்றால், கர்னாடகாவில், லிங்கத்தை, முக கவசம் சார்த்திதான் கும்பிடுவர்.

இங்கும் மீசையுடன் கூடிய சிவ உருவ கவசம், லிங்கத்தின் மீது மாட்டி, பூஜைகள் முடித்து ஜம்மென்று அலங்காரத்துடன் மாலைகளுடன் இருந்த சிவனை தரிசிக்கலாம்.தோல்வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இந்த சிவனுக்கு உண்டு என கூறப்படுவதால், கோயிலுக்கு கூட்டம் வருகிறது. சனிக்கிழமை, திங்கட்கிழமைகளில் நல்ல கூட்டம் வருகிறது. தோல்வியாதி உள்ளவர்கள், கபிலா நதியில் குளித்துவிட்டு, அந்த தண்ணீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

சிலர் அபிஷேகம் ஆர்டர் செய்து, நைவேதியமாக தரப்படும் அவல், பொரியை வாங்கி, கபிலா நதியில் உள்ள மீன்களுக்கு போடுகின்றனர்! அவை விரும்பி மேலே வந்து அவற்றை சாப்பிடுகின்றன. இதன் அருகிலேயே கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதனை “ஸ்ரீசிலாபாறை’’ என அழைக்கின்றனர். கோயிலுக்குள் கூடுதலாக மகாகணபதி மற்றும் துர்கா பரமேஸ்வரி அருள்கிறார்கள். கோயிலுக்கு முன் வழி, பின் வழி, என இரு வழியாக நுழையலாம். இங்கு சிவராத்திரி, நவராத்திரி, விநாயகசதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிராவன் மாத (ஆவணி) திங்கட்கிழமைகள் சிவனுக்கு உகந்தவை.கோயில்: காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

ராஜி ராதா

 

The post தோல் நோய்களை குணப்படுத்தும் சிசிலேஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: