சத்தியம் சுட்டும் அற்புத நாமம்

ஸர்வாருணா (ஸர்வ அருணா)

இதற்கு முந்தைய நாமாவான மஹாலாவண்ய ஸேவதி என்கிற நாமத்தைப் பார்த்தோம். இப்போது ஸர்வாருணா என்கிற நாமத்தைப் பார்ப்போம். சென்ற நாமத்தோடு இணைத்துத்தான் இந்த நாமத்தைப் பார்க்க வேண்டும். ஏன், சென்ற நாமத்தோடு இதை இணைத்துப் பார்க்க வேண்டுமெனில், ‘‘ருதஹம் சத்யம் பரம் பிரம்மம் புருஷம் கிருஷ்ண பிங்களம்’’ என்று தைத்திரிய உபநிஷத்தில் வருகிறது என்று பார்த்தோம். இந்த மஹாலாவண்ய ஸேவதி என்பதே வேதத்தில் வரும் ருதம் என்றும் பார்த்தோம். மேலும், அதை வேதம் கிருஷ்ணம் என்கிற கருமை நிறத்தைக் குறிப்பிடுகிறது என்று பார்த்தோம். இப்போது ஏன் இந்த நாமத்தை அதனுடைய தொடர்ச்சி என்று சொல்கிறோமென்று பார்ப்போம் வாருங்கள். இதற்கு முன்னால் சொல்லப்பட்ட நாமமான மஹாலாவண்ய ஸேவதி என்கிற நாமத்தில் ஒட்டுமொத்த அழகும் அவளே என்று பார்த்தோம். அம்பிகையினுடைய சௌந்தர்யத்தை சொன்னதற்குப் பிறகு, அம்பிகையினுடைய வடிவழகை சொல்லிக் கொண்டே வந்த பிறகு, அம்பிகையின் நிறத்தினுடைய அழகை இந்த நாமம் கூறுகின்றது.

நம்முடைய சாதாரண வாழ்வில் ஒரு பொருளை எப்படி அடையாளப்படுத்துகிறோம். ஒன்று வடிவம். இன்னொன்று நிறம். இப்போது ஒரு பொருளைப்பற்றி பேசுகிறோம். ‘‘சார், அது எப்படி இருக்கும்’’ என்று கேட்கிறோம், ‘‘என்ன கலர்ல இருக்கு’’ என்றெல்லாம் கேட்கிறோம் அல்லவா. எனவே, முதலில் பொருளின் பெயர், பிறகு ரூபம், அதற்கும் பிறகு நிறம். இது உலகாயத விஷயங்களில் சரிதான். அதாவது நாம ரூபத்திற்கு உட்படாத விஷயத்தைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது நாமரூபத்திற்கு உட்படாத வஸ்துதான். ஆனாலும், கருணையின் பொருட்டு நமக்காக ஒரு ரூபமாக இறங்கி வந்திருக்கிறது. அப்படி கருணையோடு இறங்கி வரும்போது, நமக்கு எப்படியெல்லாம் புரிய வேண்டுமோ அப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. நாம் இந்த வடிவத்தையும் நிறத்தையும் பார்த்தே பழக்கப்பட்டு விட்டதால், அம்பிகையும் தன்னை கருணையோடு அந்த வடிவத்திற்குள்ளும், அந்த நிறத்திற்குள்ளும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். அப்படி நிறத்திற்குள் அவள் தன்னை வெளிப்படுத்தும்போது எந்த நிறமாகத் தன்னை வெளிப்படுத்துகிறாள் எனில், சிவப்பு நிறமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். ஏன் சிவப்பு நிறமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் எனில், அதற்கொரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது.

சிவப்பு நிறம் யாருடைய நிறமெனில் சிவபெருமானுடைய நிறம். அம்பிகையை நாம் எப்போதும் கரும்பச்சை வண்ணமுடையவள், கருநீல வண்ணமுடையவள், ஷியாமளா… ஷியாமா… மீனாட்சி… என்று எல்லாமுமே ஒரு கருமை கலந்த நிறமென்றுதான் சொல்லுவோம். ஆனால், லலிதா திரிபுரசுந்தரி சிவசக்தி ஐக்கிய சொரூபிணீயாக நமக்கு எப்படி காண்பிக்கிறாள் எனில், சிந்தூராருண விக்ரஹாம் என்று லலிதையின் தியான ஸ்லோகம் கூறுகிறது. அதாவது சிவப்பிலேயும் சிவப்பு நிறம் என்று காண்பித்துக் கொடுக்கிறாள். ஏன் இவ்வளவு சிவந்த நிறமாக காண்பித்துக் கொடுக்க வேண்டுமெனில், இந்தச் சிவந்த நிறமானது சிவபெருமானுடைய நிறம். சுவாமி சிவந்த நிறமுடையவர். இப்போது சுவாமியின் திருமுன்னர் அம்பிகை இருக்கிறாள். அப்பொழுது சுவாமியினுடைய சிவந்த நிறத்தை அம்பிகையானவள் தன்மீது வாங்கிக் கொண்டு, தன்மீது அந்த சிவந்த நிறத்தை பிரதிபலிக்கச் செய்து தன்னை சிந்தூராருண விக்ரஹாம்… என்று தன்னையே சிவந்த நிறமாக மாற்றிக்கொண்டு அந்தக் காட்சியை கொடுக்கிறாள்.இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்.

இந்தச் சிவந்த நிறம் என்பது எதைக் குறிக்கிறது. சுவாமி சிதானந்தரின் கருத்துப்படி சிவந்த நிறமென்பது சமாதி அவஸ்தையை குறிக்கிறது. மேலான பிரம்ம வஸ்துவை ஒரு சத்திய வஸ்துவைத்தான் குறிக்கின்றது. இப்போது இந்த சிவப்பு நிறம் என்கிற சமாதி அவஸ்தையை ஒரு சாதகனால் நேரடியாக அணுக முடியுமா என்று கேட்டால், நேரடியாக இந்த சாதகனால் அணுக முடியாது. அப்போது அங்கே நேரடியாக இந்த சாதகனால் அணுக முடியாது என்பதால், இவன் எந்த வஸ்துவை வந்து சிவப்பு நிறமாகப் பார்த்து சமாதி அவஸ்தை என்று அணுக நினைக்கிறானோ அந்த வஸ்துவானது தானாகக் கருணை செய்து, தன்னுடைய கருணையினுடைய வெளிப்பாட்டினால்காட்டிக் கொடுத்தால்தான் உண்டே தவிர இவன் தன் முழு முயற்சியால் எதுவும் செய்ய முடியாது. அப்போது தன்னுடைய கருணையின் வெளிப்பாட்டினால் காட்டிக் கொடுக்கும்போது… அந்தக் கருணை எப்படி வெளிப்படுகிறதெனில் குருவின் மூலமாக வெளிப்படுகின்றது. சரி, குரு மூலமாக வெளிப்படக் கூடிய அந்த கருணை எது என்று கேட்டால், அந்தக் கருணைதான் அம்பிகை.அப்போது அம்பிகையினுடைய நிறம் என்னவாக இருக்கும், சிவப்பு நிறமாக இருக்கும். ஏனெனில், அந்த நேரடியாக சிவம் என்கிற சிவப்பு என்கிற சமாதி அவஸ்தையை நாம் அடைய முடியாது. அம்பிகையினுடைய தலையாய குணமான கருணையைக் கொண்டுதான் அடையப்படுகிறது. ஏனெனில், அம்மா என்றாலே கருணைதான். குழந்தையினால் அந்த இடத்தை அடைய முடியவில்லையே என்று நினைத்து அம்மாவானவள் தன் ரூபமாக அந்த நிலையை காண்பித்து, தன் மூலமாக அந்த நிலையை அடையச் செய்கிறாய்.

நம்முடைய சம்பிரதாயத்தில் சிவப்பு நிறம் என்பது துறவறத்திற்கான நிறம். கருணையின் நிறம். சமாதி அவஸ்தையில் அம்பிகையின் அருளோடு இருக்கிறார் அல்லது அந்தப் பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்பிகையின் நெற்றியில், பெண்களின் நெற்றியில் பொட்டாக இருக்கும் சிவப்பு நிறமானது அம்பிகையின் கருணையோடு வரும் சமாதி அவஸ்தை என்பது வேதாந்தத்தின் ஆழம் கூறும் பார்வை. இதனால்தான் சந்நியாசிகள் கூட தங்கள் மேலாடையின் நிறத்தை இப்படி வைத்திருக்கிறார்கள். புட்டபர்த்தி பாபா கூட தன்னுடைய அடையாளத்தையே சிவப்பு நிற நீண்ட அங்கி உடை அணிந்து தன்னுடைய நிலையை கூறாமல் கூறுகிறார். பாரத தேசத்தின் நீண்ட நெடிய பாரம்பரியத்தில் இந்த சிவப்பு நிறம் கருணையையும் உயர்ந்த பிரம்ம வஸ்துவையும் குறிக்கின்றது. ஏனெனில், for the sake of meditation, they made it this simple colour என்றும் கூறலாம்.லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகத்தின் முதல் இரண்டு வார்த்தையிலேயே இந்த நிறம் வந்து விடுகின்றது.

சிந்தூராருண விக்ரஹாம்; த்ரி
நயனாம்;
மாணிக்ய மௌலிஸ்புரத்; தாரா நாயக சேகராம்;
ஸ்மிதமுகீம்; ஆபீன வக்ஷோருஹாம்;
பாணிப்யாம் அளிபூர்ண ரத்ன சஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்; சௌம்யாம்
ரத்ன கடஸ்த ரக்த சரணாம்; த்யாயேத் பராம் அம்பிகாம்.
இப்படியாக முதல் இரண்டு வார்த்தையிலேயே சஹஸ்ரநாமத்தின் பலன் என்ன என்று தெரிந்து விடுகிறது.
சஹஸ்ர நாமத்தினுடைய பலன் என்ன? சமாதி அவஸ்தை என்கிற அந்த நிலையை அடைவது. சொத்சொரூபத்தை அடைவது. சொத்சொரூபம் என்கிற அந்த சமாதி அவஸ்தையின் நிறத்தை நாம் என்ன சொல்கிறோம். சிவப்பு என்று சொல்கிறோம்.
எப்படி நம்மாழ்வாருடைய,
உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்

– என்கிற முதல் பாசுரத்தின் முதல் வார்த்தை இருக்கிறதல்லவா… இந்த உயர் நலம் உயர் நலம் என்கிற வார்த்தையை ஆச்சார்யார் ராமானுஜர் கூரத்தாழ்வாரிடம் சொல்கிறார். அதைக் கேட்ட மாத்திரத்தில் கூரத்தாழ்வார் மூர்ச்சையாகி சமாதி அவஸ்தைக்கு சென்று விட்டார். வேறு எதுவுமே சொல்லவில்லை. பாட்டை முழுவதுமாக சொல்லவில்லை. பாட்டிற்கு விளக்கம் சொல்லவில்லை. பாஷ்யம் சொல்லவில்லை. வரதராஜ பெருமாளிடம் முன்னால் நின்று கொண்டு உயர்வற உயர்நலம் என்றார்… ஆச்சார்யார். அவ்வளவுதான். சிஷ்யரான கூரத்தாழ்வார் சமாதி நிலைக்கு சென்று விட்டார்.ஆழ்வாருடைய முதல் பாசுரத்தின் முதல் வரியானது எப்படி ஒரு சிஷ்யரை அந்த சமாதி அவஸ்தைக்குக் கொண்டுபோகிறதோ, அதேபோல் சஹஸ்ரநாமத்தினுடைய தியான ஸ்லோகத்தினுடைய முதல் வார்த்தையே நமக்கு சமாதி வார்த்தையைத்தான் காண்பித்துக் கொடுக்கிறது. அந்த வார்த்தையே சிந்தூராருண…. இதில் வரும் அருண என்கிற பதம்.

இங்கு சிந்தூராருண என்று சொல்லக்கூடிய சொத்சொரூபம் எதுவோ அதுதான் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் சர்வாருணா என்கிற நாமத்தினுடைய அர்த்தம். சர்வ அருணா… என்கிற நாமம். அருணம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். அம்பிகைக்கே அதனால்தான் அருணா என்று பெயர். அருணா அசலமான சிவனிடம் ஐக்கியமுற்றதால் அருணாசலம் என்கிற பெயரே வந்தது. அருணாசலம் என்பது சிவனை மட்டும் குறிப்பிடும் பெயர் அல்ல. சிவத்தையும் சக்தியையும் சேர்த்தே சிவசக்தி ஐக்கிய சொரூபத்தை காட்டும் பெயராகும்.அதேபோல், அம்பிகையின் நிறம் சிவப்பு எனில், அருணா என்றே சொல்லி விடலாமே அதென்ன சர்வாருணா என்று சொல்ல வேண்டுமெனில்,
அம்பிகையினுடைய மேனியின் நிறம் சிவப்பு. அம்பிகை அணிந்திருக்கும் வஸ்திரத்தின் நிறம் சிவப்பு. அம்பிகை அணிந்திருக்கும் கிரீடம். அந்த கிரீடத்தில் அணிந்திருக்கும் ரத்தினங்களின் நிறம் சிவப்பு. அம்பிகை அணிந்திருக்கக்கூடிய ஆபரணங்களின் நிறம் சிவப்பு. அம்பிகை பாதத்தில் அலங்காரமாக இருக்கும் மருதாணியின் நிறம் சிவப்பு. அப்போது அம்பிகை என்னென்ன அலங்கார வஸ்துக்கள் அணிந்திருக்கிறாளோ, அது எல்லாமே சிவப்பாகத்தான் இருக்கிறது. அதனால், எல்லாமே சிவப்பாக இருக்கக்கூடியவள் என்பதால் சர்வாருணா என்று சொல்கிறோம்.இது வெளிப்படையான அர்த்தம்.

எல்லாமே சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சர்வாருணா என்று சொல்வதற்குக் காரணம், அது அவளுடைய சமாதி அவஸ்தயை, சொத்சொரூபத்தை காண்பித்துக் கொடுக்கிறாள் என்று சொல்கிறோம் அல்லவா… இந்த சமாதி அவஸ்தையை அவளுக்கு காண்பித்துக் கொடுக்கும்போது அது சர்வமாக இருக்கும். அது அகண்டமாக இருக்கும். That is not a process which can not be experienced by fragmentation. இது process கிடையாது. அது சர்வம். அதனால்தான் சர்வாருணா என்று சொல்வதற்குக் காரணம் நமக்கு அந்த நிலையை அம்பாள் பிரசாதிக்கும்போது என்ன ஆகிறது எனில், சர்வம் என்கிற சர்வோஹம் என்கிற நிலை சித்திக்கிறது. நமக்கு சர்வோஹம் என்கிற நிலையை கொடுப்பதற்காக அவள் சர்வாருணா என்கிற நிலையில் இருக்கிறாள். இதைத்தான் உபநிஷதம் நமக்கு சத்யம் என்று காண்பித்துக் கொடுக்கிறது. இதற்கு முந்தைய நாமாவை நாம் ருதஹம் என்று பார்த்தோம். இந்த நாமம் சத்யம்.
இந்த இரண்டு நாமங்களையும் உபநிஷதம் ருதஹம் சத்யம் என்று காண்பித்துக் கொடுக்கிறது என்று பார்த்தோம். அதில் பிரம்மம் ருதஹம் சத்யம் என்று இரண்டு நிலைகளில் வேலை பார்ப்பதை சொல்கிறது. பிரம்மமானது இந்த உலகத்தினுடைய ஒழுங்காக, உலகத்தினுடைய order ஆக, இந்த உலகத்தினுடைய beauty ஆக இருக்கும்போது ருதஹம் என்று இருக்கிறது. அது மஹாலாவண்ய ஸேவதி என்று இருக்கிறது. அப்படி இருக்கிறபோது அதனுடைய நிறம் கிருஷ்ணம் என்கிற கருமை நிறமாக இருக்கிறது. அதேநேரம் இன்னொரு பிரம்மநிலையில் இந்த உலகத்தினுடைய அடி நாதமாக இந்த உலகத்தினுடைய இயக்க சக்தியாக சத்யமாக இருக்கிறது. அந்த சத்யமாக இருக்கும்போது நம்முடைய சொத்சொரூபமாக இருக்கிறது. ருதஹமாக இருக்கும்போது நாம் வெளியில் பார்க்கக் கூடிய விஷயமாக இருந்தது. சத்தியமாக இருக்கும்போது நாம் உள்முகமாக, அந்தர்முகமாக பார்க்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. அப்படி அந்தர்முகமாக பார்க்கும்போது அதனுடைய நிறம் என்னவாக இருக்கிறது எனில், பிங்களம் என்கிற சிவப்பு நிறமாக இருக்கிறது. அதனால்தான் உபநிஷதம் ருதஹம் சத்யம் பரம்பிரம்மம் புருஷம் கிருஷ்ண பிங்களம் என்று காண்பித்துக் கொடுக்கிறது.
(சுழலும்)

The post சத்தியம் சுட்டும் அற்புத நாமம் appeared first on Dinakaran.

Related Stories: