அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

ஆடகத் தாமரை ஆரணங்கே!

தன்னை உள்ளவண்ணம் காட்டியவா

“காட்டுதல்’’ என்பது தரிசனத்தை குறிக்கிறது. இந்த தரிசனமானது உபாசகர் சார்ந்தும், உமையம்மையின் அருள் சார்ந்தும், அப்யாசம் சார்ந்தும், பெரும் பயன் சார்ந்தும், கேட்கும் வரம் சார்ந்தும் ஆறு வகையாக அமையும். அந்த ஆறில் தலையானது ‘`உள்ளவண்ணம் காட்டியவா’’ என்பதனால் குறிப்பிடப்படும் சத்திய தரிசனமாகும். மற்ற தரிசனங்கள் ஐந்தும் தோன்றிய பின்பே கடைசியாக சத்ய தரிசனத்தை பார்க்க முடியும். அபிராமி பட்டரோ ஐந்து வகை தரிசனத்தை கண்டே கடைசியில் சத்ய தரிசனத்தைத்தான் கண்டார் என்ற உண்மையை வலியுறுத்தவே “தன்னை உள்ளவண்ணம் காட்டியவா’’ என்கிறார். உபாசகர்களுக்கு இந்த ஆறு தரிசனமும் உமையம்மையின் அருளால் காணக் கூடியதாக அமையும்.

தரிசனமானது குரு தரிசனம், ஞான தரிசனம், தேவதா தரிசனம், சாஸ்த்ர தரிசனம், அப்யாஸ தரிசனம், சத்ய தரிசனம் என ஆறு வகைப்படும் என்கிறார். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம். இறையருள் அடைய ஒரு நல்ல குரு அமைய வேண்டும். அந்த குருவின் உயர்வு சார்ந்தே உபாசகனின் வளர்ச்சி அமையும். ‘நின் அன்பர்’ (3) என்ற வார்த்தையால் குரு தரிசனத்தை குறிப்பிடு கின்றார். குரு உபதேசித்த வழியில் சீடனானவன் தவறின்றி புரிந்துகொண்டு மிக சரியாக சாத்திரங்களை கற்றரிய வேண்டும். இதை ‘அறிந்தேன் எவரும் அறியா மறையை’ (3) என்பதனால் அறியலாம். இதை ஞான தரிசனம் என்பர். குரு உபதேசத்தால் சீடனுக்கு தேவதை தரிசனம் இன்னவாறு அமையுமென்பதை ‘நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய்’ (61) என்பதையே தேவதா தரிசனம் என்கிறார்.

வேதம் ஆகமத்தை குற்றமற கற்றலும் கற்றவாரே செயல்படுத்துதலின் விளைவாய் அருளை சாத்திரத்தில் சொன்ன வண்ணமே பெற வேண்டும். அப்படி பெற்றுத்தரும் சாத்திரத்தை கண்டறிய வேண்டும். அதை பிற சாத்திரத்திலிருந்து விலக்கி அறிய வேண்டும். இதையே சாத்திர தரிசனம் என்பர். ‘பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே’ (6) ‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட’ (79) என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

பிராணாயாமம், ரூபத்தியானம், ஆத்மார்த்த பூஜை, யமம், நியமம் என்ற சாத்திரத்தில் கொள்ளத்தக்க தள்ளத்தக்க நெறியை பின்பற்றி ஜபம், பூஜை முதலியவைகளை சொன்ன வண்ணம் இடைவிடாமல் செய்வதனால் சாதகனின் மனதில் மாற்றம் தோன்றும். அந்த மாற்றத்தின் வழி உபாசகர் வேறு எந்த தெய்வத்தையும், தான் வணங்குவதில்லை என்ற உறுதி அவர் மனதில் தோன்றும்.

இதையே ‘பரசமயம் விரும்பேன்’ (23) இதையே அப்யாச தரிசனம் என்பர். இந்த ஐந்தையும் கடந்து கேட்கும் வரம் பயன் சார்ந்து அஷ்டமாசித்தி, லோக வசியம், மோட்சம், ஞானம் என்று பெறும் பயன் சார்ந்து உமையம்மையின் சத்திய தரிசனம் தோன்றும். உங்கள் திருமணக் கோலமும் (18) என்பதனால் அகத்தியருக்கும். ‘விண்ணளிக்கும் செல்வமும்’ (15) என்பதனால் இந்திரனுக்கும், ‘தனம்தரும்’ (69) என்பதனால் மனிதர்களுக்கும் ‘சித்தியும் சித்தி தரும் தெய்வம்’ (29) என்று ஆதிசங்கரருக்கு கூடுவிட்டு கூடுபாயும் சித்தியும். ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்’ (9) என்பதனால் சம்பந்தருக்கு ஞானத்தையும் அருளியவள் என்பதையெல்லாம் மனதில் கொண்டே “தன்னை உள்ளவண்ணம் காட்டியவா’’ என்றும் குறிப்பிடுகிறார். காட்டுதல் பார்வைக்குப் படுத்துதல் என்று பொருள்படும் சத்திய தரிசனத்தையே ‘`தன்னை உள்ளவண்ணம் காட்டியவா’’ என்கிறார்.

கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா

என்ற வரியால் உமையம்மையை நேரிலே காணும் போது மனதில் தோன்றும் உண்மையான சத்திய தரிசனத்தையும் உண்மையான அனுபவத்தையும் வெளிப்படுத்தி விளக்கினார். உலகியலில் தாய், தந்தை, சுற்றம், நட்பு இவர்களை நாடிச் சென்று பார்ப்பதுபோல் உபாசகனானவன் கோயில் கோயிலாக சென்று மூலஸ்தானத்தில் உள்ள இறைவனை கண்டு மகிழ்வார். இதற்கு காரணமான உள்ளுணர்வையே ‘உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்’ (1) என்கிறார். உலகியலில் நோய்க்கு மருந்து தீர்வு போலவும், வறுமைக்கு செல்வம் போலவும், தேடி அலையும் நமக்கு அதைப் பற்றிய தீர்வு கிடைத்தால் நம் மனம் தெளிவாகும். அதையே ‘வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்’ (47) என்பதாக நாம் பெறும் மெய் அனுபவத்தையே ‘`கண்ட கண்ணும் களிக்கின்றவா’’ என்பதனால் அறியலாம்.

மிகுந்த துன்பத்தில் நம்மை யாரும் காப்பாற்ற முடியாது. நம்மாலும் எப்படியும் தப்பிக்க முடியாது என்கிற சூழலில் இருந்து நாம் காப்பாற்றப்படும் போது நம் உள்ளம் எப்படி இருக்கும் என்பதை பட்டர் இறைவியை கண்டபோது உள்ளுள் தோன்றும் அனுபவத்தில் ‘வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை’ (19) என்பதனால் மகிழ்ச்சியையும் ‘வெவ்வியகாலன் என் மேல்வரும் போது’ (18) என்பதனால் துன்ப உணர்வையும் அதிலிருந்து அருளினால் விடுபடும் போது தனக்குள் இருந்த உணர்வை பதிவு செய்கின்றார். தன்னை காப்பாற்றும் வழி இறைவி ஒருத்தியே, தன்னை காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் உமையம்மையிடத்தே தன் கவலையை முன்வைக்கிறார். ‘அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே’ (22) என்பதனால் விடிவை குறித்து மனம் முயற்சிப்பதையே கண்ட கண்ணும் என்பதனால் பதிவு செய்கிறார்.

உள்ளத்தில் உமையம்மையை தியானிக்கும் பொழுது இதுவரைதான் கண்டு, கேட்டு, உற்று, நுகர்ந்து, சுவைத்து, நினைத்து, தெளிந்த, அழியாத இன்பத்தை, புதிதான இன்பத்தை தொடர்ந்து, அந்த இன்பத்தை நாடி இருக்கும் பண்பை ‘உள்ளத்தே விளைந்த கள்ளே, களிக்கும் களியே’ (23) என்று உமையம்மையின் அருள் அனுபவத்தை உலகியல் அனுபவத்தோடு ஒப்புமை வைத்து கூற முடியாத ஆனந்தத்தை பதிவு செய்வதையே ‘`கண்ட கண்ணும்’’ என்கிறார்.

உமையம்மையின் அருள் அனுபவத்தை பெற்றவர்கள் உலகில் இன்பத்தை போன்று மறந்துவிட முடியாது. மீண்டும் அதையே நாடக் கூடிய மனம் பெற்றுவிடுவர். சில நேரங்களில் சில பூசனைகளை முடிந்தவுடன் நாம் நினைப்பது நிறைவேறி விட்டால் அதில் தோன்றும் ஒருவித மகிழ்ச்சியைப் போன்று தோன்றும் மகிழ்ச்சியில்லை இது. அதனினும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தையே குறிப்பிடுகின்றார். உள்ள மகிழ்ச்சிக்கும், உமையம்மையின் அருளால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை ‘மறவாமல் நின்று ஏத்தவனே’ (25) என்றும் ‘எங்ஙனே மறப்பேன்’ (82) என்ற உண்மையின் சத்திய தரிசனத்தை நுட்பமாக காட்டுகிறார். இவையெல்லாவற்றையும் மனதில் கொண்டே ‘`கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா’’ என்கிறார்.

ஆட்டியவா நடம்

என்ற வார்தையால் ஆகமங்கள் குறிப்பிடும் நடராஜர் மூர்த்தி என்று சிவனின் திரு உருவத்தை அவர் ஆடலை தெளிவாக குறிப்பிடுகின்றார். திருக்கடவூரில் உள்ள காலாந்தக சபையில் சிவபெருமான் காலனை உதைத்த பிறகு பதினெட்டு நடனங்களை ஆடினார். அந்த ஆடலின் பயனால், பதினெட்டு செயல்கள், பதினெட்டு யாக்கை குற்றங்களை நீக்கி மார்க்கண்டேயர், உடல் அற்ற போதும் உடல் உணர்வை பெற்று உய்யுமாறு என்றும் உமையம்மையே அருளினாள். அதை குறிக்கும் வகையில் பட்டம் என்று சிவபெருமானுக்கு அணிவித்த ஒரு துண்டை பக்தருக்கு அணிவிக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது.

சிவபெருமான் காலனை உதைத்த பிறகு 18 நடனகங்களை ஆடி யாக்கையின் 18 குற்றத்தை நீக்கி மார்க்கண்டேயருக்கு அருளினார். அது நடராஜரை குறிப்பதாகும். அது தன் வினை என்கிறது இலக்கணம். ஆனால், காட்டியவா என்பது பிறரை ஆடச் செய்வது என்ற நோக்கிலே குறிப்பிட்டார். மிருத்தியுஞ்சயர் என்ற சிவபெருமானின் திரு உருவமானது மானுடச் சட்டை தாங்கிய ஒவ்வொரு ஆன்மாவிற்கும் உள்ளே சென்று இப்போ உலகத்திலே உடல் தாங்கி வாழும் போதே, உடல் வேறு, உயிர் வேராக பிரித்தறியும் ஞானத்தையும், அதனால் அனுபவிக்கும் ஆனந்தத்தையும், உடலை நெடுநாளைக்கு வைத்துக் கொள்கிற ஆற்றலையும், நோய் இன்மையும், மூப்பின்மையையும், மரணம் இன்மையையும் நீக்கி உயிர்களுக்கு உடல் உணர்வைத் தந்து கரும வலையில் சிக்காமல் தன்னை அறிந்து, தனக்கு உள்ளே இருக்கும் சிவனை அறிந்து, ஆன்மாவை அறிந்து, அதனுள்ளே சிவன் இருந்து இயக்கும் பண்பு அறிந்து, பரமானந்தம் அடைய உதவுகின்ற மூர்த்தியே ம்ருத்யுஞ்ஜயர். அதன் காரணமாகத்தான் இங்கே மிருத்யுஞ்சய ஹோமம் செய்து அதில் சிவபெருமானை ஆவாகித்த கலசத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்யாமல் ஹோமம் செய்த எஜமானருக்கு உள்ளே இருக்கும் சிவத்தை விளக்க அபிஷேகம் செய்வர். இந்த வழக்கமானது ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளே ம்ருத்யுஞ்ஜயரே எழுந்தருளி அந்த ஆன்மாவிற்கு, உடல் வளம், உயிர் நலம், சிவஞானம் இம்மூன்றையும் வழங்குகிறார் என்பதை குறிப்பிடுகிறது.

அமிர்த கடம் என்பதனால் உடலையும், அபிரம்யம் என்பதை உடலுக்குள் உள்ள உயிரையும், கள்ள வாரணம் என்பதனால் அதில் மறைந்திருக்கும் சிவபெருமானையும், குறிக்கும் என்கிறது மிருத்யுஞ்சய பூஜாவிதி கல்பமானது ‘த்ர்யம் பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் – முக்ஷீய மாம்ருதாத்’ என்கிறது. இதற்கு இயற்கையான நறுமணமுடையவரும், கருணையால் அடியார்களை போஷித்து வளர்ப்பவரும் ஆகிய முக்கண்ணனை பூஜித்து வழிபடுகிறோம். [உர்வாருகம் இவ] வெள்ளரிப்பழம் காம்பில் இருந்து விடுபடுவது போல் [மருத்யோ] சாவின் உடைய [பந்தன] பிடிப்பிலிருந்து [முக்ஷீய] உமது அருளால் விடுபடுவோம் ஆக மோட்ச மார்க்கத்திலிருந்து விலகாமல் இருப்போமாக இந்த மந்திரத்தின் வழி உடலுக்கு உள்ளிருந்து உணர்வாகவும் உடலுக்கு வெளியில் உணவாகவும், உள்ளேயும் வெளியேயும், சென்று வரும் மூச்சாகவும், ம்ருத்யுஞ்ஜயரும் பாலாம்பிகையும், மார்க்கண்டேயரும் இணைந்து நம் ஒவ்வொருவர் உடலிலும் தங்கி அருள் புரிகிறார்கள்.

இதையே ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்மே
பாஹி ப்ராணாணாம் க்ரந்திரஸிருத்ரோ மா விசாந்தக:
தேனான் னேனாப் யாயஸ்வ ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’

என்ற வேத வாக்கியத்தினால் நன்கு அறியலாம். இப்படி வழங்குவோருக்கு உள்ளுக்குள் இருந்து ஆட்டி வைப்பதையே ‘`ஆட்டியவா’’ என்று ம்ருத்யுஞ்ஜயரையும் “நடம்’’ ஆடியவா என்று நடராஜரையும் கூட்டியவா என்று சிவனையும் குறிப்பிடுகின்றார். உயிரையும் உடலையும் வினைக்கு ஏற்ப கூட்டு விக்கிறவன் சிவபெருமான். உடலையும் உயிரையும் பிரித்து வைக்கிறவன் எனக் கூறப்படுவதால் கூற்றுவன் (எமன்) என நாம் அறிந்தால் மட்டுமே இப்பாடல் வரியில் கூட்டியவா என்று சிவனையும் ஓட்டிய வா என்று எமனை ஓடச் செய்த ம்ருத்யுஞ்ஜயறையும் காட்டியவா இன்று ஆன்மாவிற்கு உள்ளிருந்து காட்டும் சிவனையும் ‘`ஆட்டியவா நடம்’’ என்ற ஐந்து சொற்களாலும் உடலுக்குள் இருந்து நமக்கு உதவுகிற பிரம்மா, விஷ்ணு, ருத்ர, ஈஸ்வர, சதாசிவ என்ற  ஐந்து அதிதேவதைகளையும் குறிப்பிடுகின்றார். இவையாவற்றையும் இணைத்தே “ஆட்டியவா நடம்” என்கிறார்.

ஆடகத் தாமரை ஆரணங்கே

என்பதனால் ஒரு தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் தேவதையாக உமையம்மையையே குறிப்பிடுகின்றார். உடலுக்குள் இருக்கும் ஐந்து தேவதைகளையும் தன்னருள் ஆற்றலால் உடலை படைத்தும் ஞானத்தை காட்டும் ஆன்ம பலத்தை மறைத்தும் பிறவாமையாகிய முத்தியை அருள்பவளாய் உமையம்மையே இருக்கின்றாள். சாக்த உபாசனையில் ஒவ்வொருவர் உடலுக்கு உள்ளேயும் குண்டலினி சக்தி வடிவில் உமையம்மை இருக்கிறாள். இச்சா, க்ரியா, ஞான என்ற மூன்று உணர்வுகளையும் சுஷும்னா நாடி என்ற நாடியின் உள்ளிருந்து மூன்று தாமரைகளாக தங்க நிறத்தில் உமையம்மையே இருக்கிறாள். அதனால்தான் ‘`தாமரை’’ என்ற வார்த்தையினால் குறிப்பிடு கிறார். மேலும், மனதிற்குள் உமையம்மையை தியானிக்கும்போது ஹேமாவர்ண, அஷ்ட தள கமல, என்ற பொன் வண்ண எட்டு இதழ் உடைய தாமரையின் நடுவில் மேல்நோக்கி தோன்றும் சுடர் போல உமையம்மை அருள்கிறாள் என்பதை ‘`ஆடகத் தாமரை ஆரணங்கே’’ என்ற வார்த்தையினால் குறிப்பிடுகின்றார்.

இந்த குண்டலினி சக்தியை உடலுக்குள் உள்ள தெய்வீக சிறப்பை வெளிப்படுத்தி விளங்கச் செய்வது ஆன்மாக்களுக்கு அற்புத ஆற்றல்கள், சித்திகள் அருளி, மோட்சத்தையும், அருள வல்லவள் வாழ்வையும் வளப்படுத்த வல்லவள். இதையே ‘சித்தியும் சித்தி தரும் தெய்வம்’ (29) என்பதனால் நன்கு அறியலாம். இதையெல்லாம் மனதில் கொண்டு ‘`ஆடகத் தாமரை ஆரணங்கே’’ ஆடகம் – என்பதற்கு தங்கம் என்பது பொருள். ஹாடகம் என்ற சொல்லே ஆடகம் என்று தமிழில் ஆடு + அகம் ஆடுகின்ற வீடு என்பதை குறிக்கும் வகையில் அகத்தில் ஆடியே அம்பலத்தில் ஆட வேண்டும் என்பர். இதை தாமரையில் ஆடுகிற உமையம்மையே ‘`ஆடக தாமரை ஆரணங்கே’’ என்கிறார்.

அந்தமாக

‘`கூட்டியவா என்னை தன் அடியாரில்’’ என்பதனால் உமையம்மை தன் அடியாரில் ஒருவராக அபிராமி பட்டரை அங்கீகரித்து கூறுகின்றார். ‘`கொடியவினை ஓட்டியவா என்கண் ஓடியவா’’ என்பதால் விரைந்து வந்து கொடியவினைகளை ஓட்டி துன்பம் நீக்கினாள் என்பதையும், ‘`தன்னை உள்ளவண்ணம் காட்டியவா’’ என்பதனால் உமையம்மையின் சக்திய தரிசனத்தை கண்டதையும், ‘`கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா’’ என்பதனால் உமையம்மையின் அருள் அனுபவத்தைத் தான் பெற்று திளைத்ததையும் ‘`ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே’’ என்பதனால் அனைத்து உடலிலும் தங்கி உயிர்களிடத்து, உள்ளும் புறமும் உணர்வும், மூச்சும், உணவும், உணர்வும் அறிவுமாய் அபிராமியே திகழ்கிறாள் என்பதையும் நமக்கு அறிவுறுத்துகிறார். இனி அகத்துள்ளே அவர் சொன்னவாறு தியானிப்போம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: