ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று மைசூரு நெடுஞசாலையில் புதுகுயினூர் என்ற பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது.
நேற்று அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவர் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது சிறுத்தை ஒன்று சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விவசாயி அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த வன ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மீட்பு பணியில் இறங்கினர்.
கிணற்றுக்குள் கூண்டு ஒன்றை இறக்கி அவற்றில் சிறுத்தையை நுழையவைக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. இதை அடுத்து மற்றொரு கூண்டை கொண்டு வந்த வன ஊழியர்கள் கூண்டுக்குள் ஆடு ஒன்றை அடைத்து கிணற்றுக்குள் இறக்கினர். அப்போது ஆட்டை வேட்டையாட புகுந்த சிறுத்தை கூண்டுக்குள் அடைபட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட சிறுத்தையை மங்களப்பட்டி பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
The post சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!! appeared first on Dinakaran.
