சித்திரை திருவிழா எதிரொலி செண்டுமல்லி பூ விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி பூவின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிய‌டைந்துள்ளனர்.ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளான கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, சித்தார்பட்டி, வரதராஜபுரம், கொத்தப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் செண்டுமல்லி பூ சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் பூக்களை ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவந்து விவசாயிகள் சந்தைப்படுத்துவார்கள். கடந்த மாதம் செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தது. விளைச்சல் அதிகமாக இருந்ததால் பூக்கள் அதிகமாக விற்பனை செய்யப்படாததாலும் பூக்களின் விலை கிலோ ரூ.10க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை பூ பறிக்கும் செலவிற்கு கூட போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

மேலும் செண்டு மல்லி பூக்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் மார்க்கெட்டில் விவசாயிகள் பூக்களை குப்பையில் கொட்டி சென்றனர். இந்த நிலையில் சித்திரை மாதம் தொடங்கியது‌ முதல் ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழா காலங்களும் தொடங்கியுள்ளது. இதனால் செண்டு மல்லி பூக்களை தேவை அதிகரித்துள்ளது. செண்டு மல்லி பூக்கள் கிலோ ரூ.10க்கும்‌ கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ‌கிலோ‌ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சித்திரை திருவிழா அடுத்தடுத்த பகுதியில் கொண்டாடப்பட்டு வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.‌

The post சித்திரை திருவிழா எதிரொலி செண்டுமல்லி பூ விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: