பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர், முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிசந்திரன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் அருண்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வயிற்றுப்போக்கு குறித்தும் அதை தடுப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டன. நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறந்து போகிறார்கள். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10% வயிற்றுப் போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவிற்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார பிரச்னையாகும். வயிற்றுப்போக்கிற்கான முக்கிய காரணம், பிறந்த குழந்தைகளுக்கு சீம்பால் ஊட்டப்படாததாகும்.

குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை பிரத்யேகமாக தாய்ப்பால் தராமலிருத்தல், சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்பு முறைகள், கைசுத்தம் பேணாமல் இருத்தல், வளர்ந்த குழந்தைகள் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் அருந்துவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை 15% வரை தடுக்கலாம், பாதுகாப்பாக உணவு உண்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை 70% வரை தடுக்கலாம், கை சுத்தம் பேணுவதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை 33% வரை தடுக்கலாம், வயிற்றுப் போக்கு சிகிச்சைக்காக அங்கன்வாடி நிலையங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு பொட்டலம் ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசலினை கரைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி நிலையங்களில் கை கழுவுதல் செயல் விளக்கம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் எடையினை கண்காணிக்க வேண்டும். குறைவான எடை உள்ள குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறந்தது முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் எடை வளர்ச்சி, உலக சுகாதார அமைப்பின் வளர்ச்சி அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு உள்ளதா என்பதை தாய்சேய் நல அட்டையுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் வயிற்றுப்போக்கு தடுப்பிற்கான முக்கிய தகவல்களை தாய்மார்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளை கண்டுபிடித்து சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு குறித்த எச்சரிக்கைகளை தாய்மார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

The post பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: