எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை: எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியின்போது மூலக்கரை பகுதியில் கிராம சாலை துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை 133 கி.மீ. தூரத்திற்கு பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மூலக்கரையில் இருந்து வெங்கல் வரையிலான சாலையை எறையூர், சித்தம்பாக்கம், மேலானுர், மொண்ணவேடு, ராஜபாளையம், மெய்யூர், விளாப்பாக்கம், அரும்பாக்கம், மாளந்தூர், தேவந்தவாக்கம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 200 அடி சாலைக்காக மூலக்கரையில் இருந்து வெங்கல் வரையிலான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் திருவள்ளூர் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், வெங்கல் இன்ஸ்பெக்டர் பாரதி, மற்றும் சம்மந்தப்பட்ட சாலை அமைக்கும் பணி அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் மேம்பாலம் அமைக்கப்படும். அதுவரை இந்த இடத்தில் மட்டும் பணிகள் நடைபெறாது என அதிகாரிகள் கூறினர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: