வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: வடமதுரை கிராமத்தில் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் 1969ம் ஆண்டு 3 ஏக்கர் பரப்பளவில் மின்சார துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணைமின் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் முதல், கடை நிலை ஊழியர்கள் வரை என ஆரம்பத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து வடமதுரை மின்வாரியத்தில் பணியாற்றுவதற்கு சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊழியர்களுக்காக மின்வாரியம் அருகிலேயே ஒரு குடியிருப்பில் 2 வீடுகள் என 10 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இதில் தங்கி ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அந்த தொகுப்பு வீடுகளை சுற்றி செடி கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து, வீடுகளுக்குள் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் புகுந்தது. இதனால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஊழியர்கள், ஒரு கட்டத்தில் வீடுகளை காலி செய்து கொண்டு வாடகை வீடுகளுக்கு சென்று விட்டனர்.

அதன்பிறகு தற்போது 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வடமதுரை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறார்கள். எனவே மின்வாரிய ஊழியர்களின் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சுற்றியுள்ள புதர்களை அகற்றி, புனரமைத்து, வர்ணம் தீட்டி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது இவைகளை அகற்றி விட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: வடமதுரை மின்வாரியத்தில் பணியாற்றும் எங்களுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது இந்த தொகுப்பு வீடுகள் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக முட்புதர்கள் சூழ்ந்து பழுதடைந்து கிடக்கிறது. இதனால் நாங்கள் பெரியபாளையம், வெங்கல், கன்னிகைப்பேர் போன்ற பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். மேலும் மின்வாரிய அலுவலகத்தில் பழுது என்றால் நீண்ட தூரத்தில் இருந்து வரவேண்டியுள்ளது. எனவே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும் அல்லது புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என கூறினர்.

The post வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: