எது சுகம்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

உங்கள் மனதில் மாம்பழம் வேண்டுமென்று நினைக்கிறீர்கள். உடனே அந்த எண்ணம் அது கிடைக்கும் வரையில் அதற்காக பாடுபடுகிறது. உண்டவுடன் ஒரு சுகம் வருகிறது. இப்போது இங்கு கவனியுங்கள். மாம்பழம் வேண்டுமென்று மனதிலுள்ள எண்ணங்கள் எழுந்து ஆர்ப்பரிக்கும்போது அதைச் சாப்பிட்டவுடன் அந்த எண்ணங்கள் அடங்குகின்றன. அப்போது அந்த எண்ணங்களற்ற நிலையில் ஏற்படும் சந்தோஷத்தையே சுகம் என்கிறாய். மாம்பழம் இனிப்பும், வேம்பின் கசப்பையும் நாக்கு ஒரே மாதிரியாகத்தான் வெளிப்படுத்தும்.

ஆனால், மனம் தனக்கு இது வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் பேதம் காட்டுகிறது. நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மனம் வேறெங்கேயாவது எதையோ யோசித்துக் கொண்டிருந்தால் அந்த உணவின் சுவையை அறிய முடியாமல் போய்விடும். எனவே, பொதுவாக பிரியப்பட்ட, ஆசைப்பட்ட வஸ்து கிடைக்கும்போது தற்காலிகமாக அந்த எண்ணங்கள் அடங்கும்போது நாம் அனுபவிக்கும் சுகம் ஆத்ம சுகத்தையே ஆகும்.

எனவே, எண்ணத் தொகுதியைக் கொண்டதான மனம் அடங்கும்போது உங்களின் சொரூபமான ஆத்மாவாகவே நீங்கள் இருக்கிறீர்கள். அதாவது கனவற்ற நிலையில் மிக ஆனந்தமாக, உங்களின் உடம்பையும் மறந்து விட்டு எத்தனை ஆனந்தமாக இருக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் முற்றிலும் ஒடுங்கிக் கிடக்கின்றது. அப்போது இருக்கும் ஆத்மாவாக நீங்களே பிரகாசிக்கிறீர்கள். மீண்டும் மறுநாள் எழும்போது மனம் உலகமாக விரிகிறது. நீங்களே சுக மயமானவர்கள்தான்.

உங்களின் சுகத்தை மறைக்கும் மனமும் அதன் எண்ணங்களையும் விலக்குவதே போதுமானது. எண்ணங்களற்ற தூக்கத்தில் அனுபவிக்கும் அந்த சுகமான நிலையை தூக்கமற்ற இப்போதும் அனுபவிக்கலாம். இப்போது பாருங்கள். உங்களின் யதார்த்தமான சொரூபமே பிரம்ம சொரூபம்தான். இதிலிருந்து நான் என்கிற போலியாக, அகந்தையாக, மனமாக எழுந்ததால் அந்த பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறீர்கள். அந்த சொரூப சுகத்தை, ஆனந்தத்தை அடையத்தான் இங்குள்ள உலகப் பொருட்களில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். சகல ஜீவர்களும் அதைத்தான் தேடுகின்றனர்.

பிரபஞ்சம் முழுக்க ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான கோடிக் கணக்கான உயிர்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் என்ன வேண்டும்? ஏன் இத்தனை அலைக்கழிப்புகள். ஏன் இவ்வளவு போராட்டம்? முடிவடையா வேதனைகள் முடிந்து விடும் என்கிற மாயைதானே எங்கும் வியாபித்திருக்கின்றன? அனைவரும் தேடுவது சந்தோஷம். சுகம், சாந்தி, அமைதி, இன்பம், மகிழ்ச்சி மட்டுமேயாகும். எனவே, எழும் அகந்தையை அடக்க வேண்டும். அல்லது குருவின் எதிரில் தானாகச் சென்று அடங்க வேண்டும். இவ்வாறு சுய இருப்பாக சுகமே சொரூபமாக தன்னுடைய சொந்தாக இருப்பாக இருக்காமல் எழுந்து அலையும் அகங்காரத்தை அடக்கும் சக்தியையே அருள் என்றும் கடவுள் என்றும் அழைக்கின்றோம்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர் )

The post எது சுகம்? appeared first on Dinakaran.

Related Stories: