இன்ஜினியரிங் கவுன்சலிங் ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி, அதாவது வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக தொடங்குகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 3 நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை 2ம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மாணவர்கள் பாலிடெக்னிக் தொழில்நுட்ப பட்டய படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பகுதி நேர பாலிடெக்னிக் படிப்பில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தில் மாற்றம் இல்லை. இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 51 கல்லூரிகளில் 1 லட்சத்து 62 ஆயிரம் இடங்கள் உள்ளன. முதலில் இன்ஜினியரிங் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூலை 2ம் தேதி சிறப்பு கலந்தாய்வு தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறும். பொதுக் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். மேலும் செப்டம்பர் 3ம் தேதி முதல் இன்ஜினியரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும். அரசுக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 20 விழுக்காடு இடங்கள் அதிகரித்து இருந்தது. இந்தாண்டும் தேவை ஏற்பட்டால் கூடுதல் இடம் உயர்த்த உயர்க்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இன்ஜினியரிங் கவுன்சலிங் ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: