திராவிட மாடல் அரசின் சாதனை பயணம் பல ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடரும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திராவிட மாடல் அரசினுடைய சாதனைப் பயணம், இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்து வரவிருக்கின்ற பல ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த திராவிட மாடல் அரசின் நான்காண்டு நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்த 4 ஆண்டுகளில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகளை முதல்வர் செய்து இருக்கிறார். இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள் என்று பார்த்து, பார்த்து ஒவ்வொரு பிரிவுக்கும் என்னென்ன தேவையோ அதை எல்லாம் செய்திருக்கிறார். இதேநாள் மே 7ம் தேதி, 2021 வருடம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அன்று ஒலித்த அந்த குரல் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் அரசு 2 ஆண்டுகள் நிறைவு செய்தபோது, அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டினுடைய ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று வந்தது.

இன்றைக்கு 4 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற இந்த நேரத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு தனி நபரும் அரசால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அதனால் தான் இன்றைக்கு முதல்வர் கொடுத்து வருகிற தமிழ்நாட்டினுடைய திட்டங்களை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே பின்பற்றுகிறது. இது வெறும் திராவிட மாடல் அல்ல. இது சாதனை மாடல் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ச்சியில் இருந்த தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி சதவீதம் முதல்வரின் திட்டங்களால், இன்றைக்கு 9.69 சதவீதத்துடன் இந்தியாவிலேயே முதல் இடைத்தை அடைந்திருக்கிறது. இந்த சாதனைகளோடு திராவிட மாடல் அரசு இன்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இனிய விழாவுக்கு தலைமையேற்க வந்திருக்கக்கூடிய முதல்வரை வரவேற்கிறேன்.

அதேபோல, அனைத்து மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள், அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிள், நலத்திட்டங்களை பெற வந்துள்ள அனைத்து பயனாளிகள், மாணவர்கள், நிர்வாகிகள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களையும் வரவேற்கிறேன். திராவிட மாடல் அரசினுடைய சாதனைப் பயணம், இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்து வர இருக்கின்ற பல ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடரும். அதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் முதல்வருக்கு பக்கபலமாக இருந்து செயலாற்றுவோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 

The post திராவிட மாடல் அரசின் சாதனை பயணம் பல ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடரும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: