சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்ட
அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் பழைய ஓய்வூதிய திட்ட பயன்களோடு, புதிய பயன்களும் கிடைக்கக்கூடிய புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
மகளிர்க்கான உரிமை தொகை, காலை உணவு திட்டம், உயர்கல்வி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் தமிழ்நாடு அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஒரு பக்கம்.
மறுபக்கம் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு முறைப்படி வழங்க வேண்டிய நிதி எதனையும் வழங்காமல் முடக்கி வைத்து சன்டித்தனம் மறுபக்கம் என கடும் நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு உள்ள நிலையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பல்வேறு மக்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர். அவர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி உள்ள முதல்வரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
