சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுபவரான ராஜேந்திர சிங்கை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
ரமோன் மகசேசே விருது வென்றவரான தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் இந்தத் துறையில் செய்துள்ள பணிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. நீர்வளங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவர், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து நிறுத்தி ஆற்றைத் தூய்மைப்படுத்த சிறப்பான திட்டங்களை வகுத்துத் தருவார் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
