கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இன்று மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. “கல்வி அனைவருக்கும், உயர்வு ஒவ்வொருவருக்கும்” என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த டெல், ஏசர், எச்பி போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் 8 ஜிபி ராம், 256 ஜிபி எஸ்எஸ்டி உள்ளிட்ட மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக எம்எஸ் ஆபிஸ் 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை, மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு கருவிகள், சுயாதீன வேலை போன்ற துறைகளில் “புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம-நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், “கல்வி மூலம் சமூக மேம்பாடு, தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், “உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படைத்த மாணவர்கள், முக்கிய பெருமக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் முதலியோர் பங்கு பெறுகிறார்கள்.

 

Related Stories: