சென்னை: தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்:
ஜி.டி.நாயுடுவின் ஆவணங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ”தமிழ்நாட்டு அறிவியலாளர் ஜி.டி. நாயுடு” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு இணையப் பக்கத்தை https://tamildigitallibrary.in/gdn அவரது நினைவு நாளில் (நேற்று) தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பன்முக ஆளுமை ஜி.டி.நாயுடு, அரிய நூல்கள் அடங்கிய பெரிய நூலகம் ஒன்றைப் பராமரித்துவந்தார். அவருடைய தொகுப்பிலிருந்து 30 ஆயிரம் புத்தகங்களை அந்நாளைய கோவை நகரமன்றத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பொதுவிழாக்களில் கலந்துகொண்டபோது, தம்முடைய உரையைச் சிறுநூலாக அச்சடித்து அவையினருக்குக் கொடுப்பது அவரது வழக்கம்.
அப்படியான அவரது எழுத்துகளையும் சிந்தனைகளையும் தாங்கிய கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், அவர் பதிப்பித்த, அவர் வாசிப்புக்காகச் சேகரித்த நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட அரும்பெரும் இணையப் பக்கம் இது. “ஜி.டி.நாயுடுவின் அறிவைச் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியருக்கு, அவருடைய கண்டுபிடிப்பும் அறிவும் பெரும்கருவூலங்களாக அமையும்” என அறிஞர் அண்ணா கூறியதைத் தமிழ்நாடு அரசு அவருடைய சிந்தனைகளைக் கருவூலமாக்கி ஓர் அரிய காலப்பேழையை வெளியிட்டு நனவாக்கியுள்ளது.
”தமிழ்நாட்டு அறிவியலாளர் ஜி.டி. நாயுடு” சிறப்பு இணையப் பக்க உருவாக்கத்தில் பங்குவகித்த அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அறிவைப் பொதுமை செய்வோம் என்னும் நோக்கத்தில் செயல்படும் தமிழ் மின் நூலகத்தின் இந்தச் சிறப்பு இணையப் பக்கம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு நல்வரவு. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
