திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளில் அலைபேசி, வலைதளம் வாயிலாக 14,318 கோரிக்கைகள் பரிந்துரை: பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க அறிமுகம் செய்யப்பட்ட அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் வழியாக ஒரே நாளில் 14,318 பேர் கோரிக்கைகள், பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தார்.

இக்குழுவினர் பொதுமக்கள், வணிகர், விவசாயிகள், இளைஞர், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (போர்டல்) ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.

இதற்காக 08069446900 என்ற தொலைபேசி எண்ணில் ஆலோசனை தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ்அப் எண்-9384001724, மின்னஞ்சல்-dmkmanifesto2026@dmk.in, இணையதளம்-//www.dmk.in/ta/manifesto2026, சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26, செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai என்ற தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் திமுகவிற்கு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

2026 திமுக தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் அறிமுகம் செய்யப்பட்டதோடு நில்லாமல் மாநிலம் முழுக்கவும் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வரவேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் தொலைபேசி வழியாக 1,188, வாட்ஸ் அப் வழியாக 7,527, மின்னஞ்சல் வழியாக 251, சமூக வலைதளங்களான இணையதளம் வழியாக 2015, கியூ ஆர் ஸ்கேன் வழியாக 692, ஏஐ வலைவாசல் வழியாக 2645 பேர் என மொத்தம் 14,318 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. திமுகவின் இந்த புதிய முறை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: