சென்னை: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 10ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. காலையில் பனி மூட்டம் காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1-2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்பட்டது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், தெற்கு கேரளக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. உள் தமிழகத்தை பொருத்தவரையில் வறண்ட வானிலை நிலவும்.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். 7, 8ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.
10ம் தேதி தென் தமிழகம், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 7ம் தேதி வரையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். இது தவிர, 8ம் தேதி வரையில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கி ழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.
