உரிய சான்றிதழ் கிடைக்க காலதாமதம் அதிகாரிகளின் அலட்சியத்தால் மருத்துவ படிப்பை இழந்த மாணவன்

தோகைமலை, டிச.3: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி மேட்டூர் பகுதியை சேர்ந்த மருதை, சரசு தம்பதியரின் மகன் சின்னதுரை (18). மருதை மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. சின்னதுரை கொசூர் அருகே உள்ள செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 447 மதிப்பெண் பெற்று உள்ளார். சின்னதுரை ஈரோட்டில் உள்ள தனியார் பயிற்சி கூடத்தில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அந்த பயிற்சி கூடத்தின் மூலம் 2020ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பமும் செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அறிவித்த பிறகு சின்னதுரை பயிற்சி கூடத்தில் இருந்து தனது கிராமத்திற்கு வந்து விட்டார். பின்னர் வீட்டில் இருந்து படித்து வந்த சின்னதுரை கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 229 மதிப்பெண் பெற்றார். அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி நடைபெறும் மருத்து கலந்தாய்வுக்கு நவம்பர் 12ம்தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற தகவல் நண்பர்கள் மூலம் சின்னதுரைக்கு கிடைத்துள்ளது.

இதில் விண்ணப்பம் செய்வதற்கு வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றுகள் இணைக்க வேண்டும் என்பதால் வருமானம் மற்றும் இருப்பிடம் சான்று பெறுவதற்கு கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி விண்ணப்பம் செய்து உள்ளார். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், 13ம் தேதிதான் வருமானம் மற்றும் இருப்பிடம் சான்று கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழக அரசு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்துள்ளதால் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தமைக்கான சான்றும் பெற வேண்டி இருந்தது.

இதனால் போதிய மதிப்பெண்கள் இருந்தும், மருத்துவ கலந்தாய்வுக்கு தேவையான சான்றுகள் குறித்த நேரத்தில் கிடைக்க பெறாமல் மருத்துவ படிப்பை இழந்து உள்ள மாணவன் சின்னதுரை மிகுந்த மன வேதனை அடைந்தார். முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் மருத்துவப்படிப்பை இழந்து உள்ள மாணவனின் கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர். எனவே ஏழை மாணவன் சின்னதுரைக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: