கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்: வீரர், வீராங்கனைகள் விளையாட செல்லாததால் வெறிச்சோடியது

கரூர், ஏப். 27: கரூர் காந்தி கிராமத்தில் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் அங்கு விளையாட செல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. கரூர் காந்திகிராமத்தில் மைய பகுதியில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களில் விளையாடி பொழுதுபோக்குவதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் ஆரோக்கியத்திற்காக விளையாட்டு மைதானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கரூர் காந்தி கிராமத்திலும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விளையாட்டு மைதானம் செயல்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தை நாடாளுமன்ற உறுப்பினராக அப்போது பணியாற்றிய கே.சி.பழனிச்சாமி உருவாக்கி தந்தார்.

மேலும் அந்த விளையாட்டு மைதானத்தில் ஒரு அரங்கமும் கட்டிக் கொடுத்தார். அனைத்து வசதிகளும் கரூர் காந்தி கிராமம் அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் அந்த விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி எடுத்து வந்தனர். மேலும் பொதுமக்கள் சிலர் மாலை நேரங்களில் நடைபயிற்சிக்காவும் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் விளையாட்டு மைதானத்தை பராமரிக்கும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் விளையாட முடியாமல் மாணவர்கள் சிறியவர்கள் தவிக்கின்றனர். இதன் காரணமாக மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் விளையாட செல்லாமல் விளையாட்டு மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே விளையாட்டு மைதானத்தை முறையாக சீரமைத்து மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் அங்கு விளையாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்: வீரர், வீராங்கனைகள் விளையாட செல்லாததால் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Related Stories: