கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பாப்பக்காபட்டியில் சுற்று சுவர் இன்றி பாதுகாப்பற்ற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்

குளித்தலை, நவ. 21: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பக்காபட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார துணை நிலைய கட்டிட அலுவலகம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சென்று மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர சோதனைகளை செய்வதற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இரும்பூதிபட்டியிலிருந்து தரகம்பட்டி செல்லும் வழியில் பாப்பக்காபட்டி மெயின் ரோட்டில் தற்போது சுற்று சுவரில்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் பலகை வைத்து அடைத்து உள்ளனர்.

இக்கட்டிடம் கிராம பகுதியில் இருப்பதால் சுற்றுப்புறத்தில் செடி கொடிகளுடன் அடர்ந்து காட்டுக்குள் இருப்பது போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.எனவே மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாப்பக்காபட்டி ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: