வால்பாறை எஸ்டேட் பகுதியில் கல்வி தொலைக்காட்சி தெரிவதில்லை

வால்பாறை, அக்.21: வால்பாறையில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்  எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நேரில் சந்தித்து பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்ற ஆசிரியர்கள் குடியிருப்பு பகுதியில் மாணவர்களை தேடி உள்ளனர். பெற்றோர்கள் தேயிலைத்தோட்ட பணிகளுக்கு சென்ற நிலையில், ஆசிரியர்களை கண்டதும் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்து அக்கம் பக்கம் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு சென்று பதுங்கி விட்டனர். அவர்களை விரட்டிபிடித்து ஆசிரியர்கள் ஆலோசனை மற்றும் பாடம் குறித்தும், கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை முறையாக கவனிக்கவேண்டும் என அறிவுரை வழங்கியும், பாடங்களை படிக்க ஆலோசனை வழங்கியும் உள்ளனர்.ஆசிரியர்களை கண்டு ஓடிய மாணவர்கள் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், விடைத்தாள்கள் தயாரிக்காததால் ஓடியதாக கூறியுள்ளனர். மேலும் கல்வி தொலைக்காட்சி தெரிவதில்லை என்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்து ஆலோசனை வழங்கியது பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பல எஸ்டேட்களில் ஆசிரியர்களை அனுமதிக்காததால் பேருந்து நிறுத்தங்களில் வைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். வெளியூர் பகுதி ஆசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு செல்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Related Stories: