வறட்சி அதிகரிப்பு; போர்வெல் அமைக்க கட்டுப்பாடு

கோவை, ஏப்.23: கோவை மாவட்டத்தில் ஆறு, பாசன வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் போர்வெல் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வெயில், வறட்சி தாக்கம் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் போர்வெல் அமைப்பது அதிகமாகிவிட்டது. குறிப்பாக நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பிற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து நீர் தேக்க பகுதியில் போர்வெல் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், தாங்கள் போர்வெல் அமைத்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூர சுற்றளவில் போர்வெல் அமைக்க தடை விதித்துள்ளனர். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் புதிதாக போர்வெல் அமைக்கக்கூடாது என உள்ளாட்சி நிர்வாகங்கள், பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, இடிகரை, வெள்ளகிணறு, நீலம்பூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் அமைப்பது அதிகமாகி வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘ஆறு, பாசன வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரம் வரை போர்வெல் அமைக்கக்கூடாது என தடை உத்தரவு அமலில் இருக்கிறது. சிலர், குளக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போர்வெல் அமைப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். குளக்கரை அருகே போர்வெல் அமைக்க தடை விதிக்க எந்த உத்தரவும் வரவில்லை. குளக்கரையை சுற்றிலும் வீடுகள் அதிகமாகி வருகிறது. நகரில் பல இடங்களில் குளக்கரை அருகே போர்வெல் அமைக்கப்பட்டிருக்கிறது. குளம், ஆறு, வாய்க்கால் போன்றவற்றில் தனி நபர்கள் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் போர்வெல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும்’’ என்றனர்.

The post வறட்சி அதிகரிப்பு; போர்வெல் அமைக்க கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: