கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு ‘பிம்ஸ்’ நோய்

கோவை, அக். 21:  கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை “பிம்ஸ்” என்ற புதிய நோய்த் தொற்று தாக்கி வரும் நிலையில் கோவையில் இது தொடர்பான கண்காணிப்பை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனாவால் 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதில்லை என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு பிம்ஸ் என்ற புதிய நோய் தொற்று ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.  அதன்படி, குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி, தோல்கள் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறிகள் தெரியும். இந்த பிம்ஸ் நோய் குழந்தைகளின் உடல் உறுப்புகளை தாக்கி பாதிப்படைய செய்கிறது. குறிப்பிட்ட மருந்து மூலம் சிகிச்சை அளிப்பதால் விரைவில் குணமடைகின்றனர் என கூறப்படுகிறது. சென்னை, மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு பிம்ஸ் நோய்த் தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்த குழந்தைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பிம்ஸ் நோய் தாக்குவதாக தெரிவித்துள்ளனர். சென்னை, மதுரையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோவையில் இதுவரை இதன் பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில் 1,774 குழந்தைகள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  குழந்தைகள் உடல்நிலையில் ஏதும் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் (பொ) காளிதாஸ் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டுக்கு சென்ற குழந்தைகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் பெற்றோரிடம் மருத்துவர்கள் காய்ச்சல், சளி, கண் சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட பிரச்னை குழந்தைக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். தற்போது, வரை எந்த குழந்தைக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும்,  குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் தொற்று ஏற்பட்டாலும் இதற்கு சிகிச்சை அளிக்க போதுமான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: