வாகன சோதனையில் ரசீது வழங்காமல் போலீசார் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்

பொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சியில் கடந்த சில மாதமாக போலீசார் முக்கியமான சாலைகளில் வாகன சோதனை செய்து வருகின்றனர். இதில் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் விதிமீறி வருவோர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.   தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலையில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்வது அதிகரித்துள்ளது. அதிலும், கோவை, உடுமலை, மீன்கரை, கோட்டூர் ஆகிய ரோடுகளில் பைக் ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், முறையான ஆவணம் இல்லாமலும், அதிவேகமாக வரும் வாகன ஒட்டிகளுக்கும் அபராத விதித்து வருகின்றனர்.

 ஆனால், சில இடங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை வழங்குவதற்கான ரசீதை முறையாக வழங்குவதில்லை என்ற  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சிலரிடம், அபராத தொகையைவிட கூடுதல் தொகையை வாங்குவதாகவும், உரிய அபராத தொகைக்கான ரசீது வழங்காமல் அனுப்பி வைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: