அரூரில் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி மாவட்டம் அரூரில் சாலை விபத்து கோப்புகள் கையாள்வதற்கு, போக்குவரத்து போலீஸ் ஏட்டு 7ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காக அதிரடியாக சஸ்பெண்ட் செய்து, தர்மபுரி எஸ்பி ராஜன் உத்திரவிட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் போக்குவரத்து பிரிவில், போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கந்தசாமி (57). இவர் கடந்த 2 ஆண்டுகளாக, அரூர் பகுதியில் பணியாற்றினார். சமீபத்தில் நடந்த ஒரு ஆட்டோ சாலை விபத்து வழக்கை போலீஸ் கந்தசாமி விசாரித்தார். அப்போது இந்த வழக்கை கையாள்வதற்கு, விபத்தை ஏற்படுத்தியவரிடம் லஞ்சமாக 15ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதில் ஒருபகுதி தொகையான ₹7ஆயிரத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீஸ் ஏட்டு கந்தசாமி வழங்கியுள்ளார்.

மீதமுள்ள தொகையும் கேட்டு, கந்தசாமி நச்சரித்துள்ளார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர்கள், கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் தர்மபுரி எஸ்பி ராஜனிடம் ரகசியமாக புகார் அளித்தனர். இந்த புகாரைத்தொடர்ந்து எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில், அரூர் டிஎஸ்பி செல்லபாண்டியன் விசாரித்தார். இதில், விபத்து வழக்கு ஆவணங்களை கையாள்வதற்கு 7ஆயிரத்தை கந்தசாமி லஞ்சமாக வாங்கியிருப்பது உறுதியானது. இதையடுத்து எஸ்பி ராஜன், போக்குவரத்து போலீஸ் ஏட்டு கந்தசாமியை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: