கடையம், மார்ச் 13: கடையத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் உடைப்பு சீரமைக்கப்பட்டது.
கடையம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர் வழியாக தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கடையம் மெயின் ரோட்டில் குழாயில் உடைந்து குடிநீர் வீணானது. குழாய் உடைந்த பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்தனர். கனரக வாகனங்கள் பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மீது வாரி இறைத்தன. தினமும் தண்ணீர் வெளியேறுவதால் தென்காசி, செங்கோட்டை பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியான நிலையில், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் குழாய் உடைப்பை சரி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.